தில்லியில் 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி, ஓடும் பஸ்ஸில் 23 வயது துணை மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் நான்கு குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்த வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் சிங் (27), வினய் சர்மா (21), பவன் குப்தா (20), அக்ஷய் தாகுர் (29) ஆகியோரின் மரண தண்டனையை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரேவா கேத்ரபால், பிரதிபா ராணி ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை உறுதி செய்து உத்தரவிட்டது.
“மிகவும் அரிதிலும் அரிதான வழக்கின் பிரிவின் கீழ் இந்த வழக்கு வருவதால் குற்றவாளிகளின் தண்டனை உறுதி செய்யப்படுகிறது’ என்று நீதிபதிகள் அமர்வு உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
இத் தீர்ப்பை நீதிபதிகள் அறிவித்தபோது, பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த துணை மருத்துவ மாணவியின் பெற்றோரும் நீதிமன்றத்தில் அமர்ந்திருந்தனர். தீர்ப்புக்குப் பிறகு, நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம், பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் கூறுகையில், “நாங்கள் நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தோம். இத்தகைய தீர்ப்பைத்தான் எதிர்பார்த்திருந்தோம். ஆனால், எங்களுக்கு முழுமையான திருப்தி என்பது நால்வரும் தூக்கிலிடப்பட்ட பின்னரே கிடைக்கும்’ என்றார்.
















