இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஜெர்மனியும் டென்மார்க்கும் கேள்வி எழுப்பியுள்ளன. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஜெர்மனியும், டென்மார்க்கும் தெரிவித்துள்ளன.உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படாமை குறித்து கவலையடைவதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.
யுத்த நிறைவின் பின்னர் குற்றச் செயல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது. ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களினால் பணிகளை முன்னெடுப்பதில் தொடர்ந்தும் சிரமங்கள் நிலவி வருகின்றன என தெரிவித்துள்ளது,இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து கண்காணிக்கப்பட வேண்டுமென ஜெர்மனி, மனித உரிமைப் பேரவையிடம் கோரியுள்ளது.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடித்து வருவதாக டென்மார்க் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது,இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வசேதச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதே டென்மார்க்கின் நிலைப்படு என தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஊடாக சர்வதேச விசாரணைப் பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது

















