கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அமைதிபுரம் பங்குத்தந்தை பிரவீன் மகேசன், தென்பகுதியைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ ஆகியோர் நேற்றிரவு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிந்தது.
நேற்று ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வில் இலங்கை அரசுசார்பாக அளிக்கப்பட்ட விளக்கம் ஒன்றில், விடுதலைப் புலிகளை மீளக்கட்டியெழுப்புவதற்கு சிலர் முயற்சித்து வருவதாகவும் இவ்வாறான நடவடிக்கையிலேயே கைதான மதகுருவும் மனிதஉரிமை செயற்பாட்டாளரும் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் நேற்றிரவு இருவரும் அவசரமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் இரவோடிரவாக கொழும்புக்கு மாற்றப்பட்டிருந்தனர்.
தருமபுரம் பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து இருவரும் தகவல் பெறமுற்பட்ட சமயமே தாம் அவர்களை கைது செய்ததாகப் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
மதகுரு மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரது கைதுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுடன் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் தமது கண்டனங்களைத் தெரிவித்திருந்தன.
இந்த சம்பவம் குறித்து ஐ.நா. சபையும் கருத்தில் எடுத்திருந்தது. இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் இருவரையும் 3 மாதங்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கான அனுமதி பாதுகாப்பு அமைச்சினால் நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

















