ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்த அதிகாரபூர்வமற்ற வாதப்பிரதிவாதங்கள் நேற்றும் (18) இடம்பெறவுள்ளன.
இந்த விவாதத்தின்போது இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவான மற்றும் எதிரான நாடுகள் தமது கருத்துக்களை தெரிவித்துள்ளன.
இந்நிலையில் மனித உரிமைப் பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கை தரப்பு வாதங்களை ஆபிரிக்க நாடுகளிடம் முன்வைத்துள்ளார்.
அமெரிக்கா, பிரித்தானியா, மொரிஷியஸ் உள்ளிட்ட ஐந்து நாடுகள் ஒன்றிணைந்து இலங்கைக்கு எதிரான பிரேரணையை வலுப்படுத்தியுள்ளன.
இலங்கைக்கு எதிரான பிரேரணை குறித்த முதற்கட்ட அதிகாரபூர்வமற்ற வாதப்பிரதிவாதங்கள் கடந்த 7ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இடம்பெற்றது.
முதற்கட்ட வாதப்பிரதிவாதத்தில் இலங்கை சார்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க கலந்து கொண்டார். பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, வெனிசூவேலா உள்ளிட்ட நாடுகள் இலங்கையை ஆதரித்து கருத்து வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் சார்பில் கீழ்நிலை அதிகாரி ஒருவர் பங்கெடுத்திருந்ததோடு கருத்துக்கள் எதனையும் முன்வைக்கவில்லை. வாதப்பிரதிவாதங்கள் ஆரம்பித்த நாள் முதல் அமெரிக்காவின் பிரேரணை தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் மௌனம் காத்துவருகிறது.

















