நவிப்பிள்ளை அறிக்கைக்கு சர்வதேச நாடுகள் ஆதரவு

un_26_03_2014_5

இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை, நேற்றைய அமர்வில் உரையாற்றிய அரைவாசிக்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகள் வரவேற்றுள்ளதுடன் அதனைச் செயற்படுத்துவதற்குரிய தமது ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் சபையின் 25 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 22 ஆவது அமர்வில் சொல்லப்பட்டதற்கு அமைவாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கைக்குக் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் வருகை தந்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டிருந்தார். இது தொடர்பிலான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை நேற்று அமர்வில் சமர்பிக்கப்பட்டது. சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதற்கான காரணங்களைக் குறிப்பிட்டுள்ளதுடன், அண்மையில் இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல் சம்பவங்களையும் அவர் பட்டியலிட்டு சமர்பித்திருந்தார். அதற்குப் பதிலளித்த, இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க, குறித்த அறிக்கையை நிராகரிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இதன் பின்னர் உறுப்பு நாடுகள் அறிக்கை மீது தமது விவாதத்தை தொடர்ந்தன. 47 உறுப்பு நாடுகளில் 19 நாடுகள் தமது கருத்துக்களை முன்வைத்தன. இதில் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை வரவேற்று 12 நாடுகள் கருத்துக்களை முன்வைத்தன. இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறை தோல்வியடைந்துள்ளதால் சுதந்திரமான சர்வதேச விசாரணை அவசியம் என்ற ஆணையாளரின் பரிந்துரையை வரவேற்றன. அத்துடன், சிவில் சமூகத்தினர், மனித உரிமை பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள், மத சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் என்பன தொடர்வதுடன் மனித உரிமை மீறல்கள் இன்னமும் இலங்கையில் இடம்பெறுவதை சுட்டிக்காட்டினர். கிரேக்கம் (ஐரோப்பிய ஒன்றியம் சார்பில்), மொன்றிநீக்ரோ, அமெரிக்கா, பிரான்ஸ், அயர்லாந்து, மொரோக்கொ, பிரிட்டன், தென்னாபிரிக்கா, சியாரா லியோன், வெனிசுவேலா, யப்பான், மசிடோனியா ஆகிய நாடுகளே மனித உரிமை ஆணையளரின் அறிக்கையை வரவேற்றிருந்தனர். இலங்கையின் அபிவிருத்திப் பணிகளைப் பாராட்டியதுடன், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு எதிராக அல்ஜீரியா, கியூபா, பாகிஸ்தான், நமீபியா, ரஸ்யா, சீனா, வியட்நாம் ஆகிய நாடுகள் தமது கருத்துக்களை வெளியிட்டனர். இதைப் போன்று பார்வையாளர் நாடுகளாக கலந்து கொண்ட 21 நாடுகளில் 12 நாடுகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை எதிர்த்தும், 9 நாடுகள் ஆதரித்தும் கருத்து வெளியிட்டனர். பார்வையாளர் நாடுகள், அமெரிக்க பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , , ,

Leave a Reply