ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 25 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை மீதான விவாதம் இடம்பெற்ற போது பாலேந்திரன் ஜெயகுமாரி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து உறுப்பு நாடுகள் எழுப்பியிருந்த கேள்விகளுக்குப் பதிலளித்த இலங்கை தத்தம் நாடுகளில் மீண்டும் தலையெடுக்க முனையும் பயங்கரவாத வலையமைப்புக்களின் அச்சுறுத்தலுக்கு தாங்கள் முகம் கொடுக்க நேரிடின் அவர்களின் பிரதிபலிப்பு என்னவாக இருக்குமென கேள்விக்கணை தொடுத்தது.
இது குறித்து ஜெனிவாவில் உள்ள இலங்கைத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தேசியப் பாதுகாப்பை மட்டுமே நோக்கமாகக் கொண்டு தங்களின் கடமைகளை குறித்த அதிகாரிகள் நிறைவேற்றி வரும் போது அத்து மீறும் வகையில் சுய இலாபம் கருதும் தரப்பினர் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு களங்கமேற்படுத்த முனைந்து வருகின்றனர். நாட்டில் பயங்கரவாதம் புத்துயிர் பெறுவதைத் தவிர்க்கும் பொருட்டு இலங்கை தற்போது மேற்கொண்டு வரும் தேடுதல் நடவடிக்கையின் வேகத்தைக் குறைக்கும் செயற்பாடு எதனையும் மேற்கொள்ள வேண்டாமென அது ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளைக் கேட்டுக் கொள்ளும் அதே சமயம் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் புத்துயிர் பெற்று வருவதனை நிரூபிக்கும் நம்பகமான சான்றின் அடிப்படையில் இலங்கை பயங்கரவாதத்திலிருந்து அதன் பிரஜைகளைப் பாதுகாக்கும் அதன் நடவடிக்கையை ஒரு போதும் நிறுத்தப் போவதில்லை எனவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெயகுமாரியின் கைது நடவடிக்கைக்கு அதிகாரிகளை இட்டுச் சென்ற சந்தர்ப்ப சூழ்நிலைகள் குறித்து அது விபரிக்கையில் இத்தகைய புலன் விசாரணை நடவடிக்கை ஆற்றுகை தனிநபர்களைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சித்தரிக்கப்படக் கூடாதெனவும் தேசியப் பாதுகாப்பு கருதி சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் செய்து வரும் கடமைகளுக்கு சுய இலாபம் கருதும் தரப்பினர் களங்கம் கற்பிக்க முனைவது விசனத்திற்குரியதெனவும் தெரிவித்துள்ளது.
புதைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் மீட்கப்பட்ட ஆயுதத்தொகுதியொன்று விடுதலைப்புலிகள் மீண்டும் தலையெடுத்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதற்கான சான்றாக அமைந்துள்ளது. பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்ற கோபி என அழைக்கப்படும் விடுதலைப் புலிப் பயங்கரவாதி திருமதி ஜெயகுமாரியின் வசிப்பிடத்தில் தங்கியிருந்தமை கண்டறியப்பட்டிருந்தார். அங்கு காணப்பட்டிருந்த அவரது மகள் நீதிவான் நீதிமன்ற நீதியரசரின் உத்தரவுக்கமைய சிறுவர் நன்னடத்தைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
தப்பிச் சென்றிருந்த விடுதலைப்புலிப் பயங்கரவாதி கோபியின் வீட்டிற்கும் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த இடத்திற்கும் ருக்கி பெர்னாண்டோவும் அருட்தந்தை பிரவீனும் விஜயம் செய்திருந்ததை அடுத்தே அவர்களிருவரும் புலன் விசாரணைக்கென தடுத்து வைக்கப்பட்டனரெனவும் இலங்கை தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது

















