ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை 23 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டாலும், குறித்த தீர்மானத்திற்கு நடுநிலை வகுத்தவர்களினதும், எதிராக வாக்களித்தவர்களினதும் எண்ணிக்கை அதிகமாகும். ஆகையால் இத்தீர்மானத்தை சர்வதேசத்தில் அமுல்படுத்த முடியாது என வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சென்ற முறையை பார்க்கிலும் இலங்கைக்கு ஆதரவளித்தவர்களின் தொகை அதிகரித்துள்ளது. அவற்றில் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த இரண்டு முறை இலங்கைக்கு எதிராக வாக்களித்து இம்முறை ஆதரவாக வாக்களித்தமை பாராட்டத்தக்கது எனவும் அவர் குறிப்பிட்டதார்.
அம்பாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை கொண்டுவரும் நோக்குடன், அமெரி;க்கா உள்ளிட்ட ஐந்து நாடுகள் நமது நாட்டிற்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு பிரேரணையொன்று முன் வைத்தது. குறித்த பிரேரணையானது சர்வதேச பொறிமுறைக்கு முரணானதாகும்.
அத்தோடு, குறித்த பிரேரணைக்கு வலுச் சேர்க்கும் வகையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையும் அமைந்திருந்தது. இந்த அறிக்கை பக்க சார்பான முறையிலேயே தயாரித்துள்ளார். எனவே குறித்த அறிக்கையை ,லங்கையிலே ஏற்றுக்கொள்ள முடியாது. ஐ.நா.மனித உரிமைகள் பேரவையென்பது உலக அதிகாரமிக்க நிறுவனமாகும். இந்நிலையில் இந்நிறுவனம் பக்க சார்பாக செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதேவேளை, நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சர்வதேச விசாரணை வேண்டி நிற்கிறது. இந்நிலையில் குறித்த விசாரணையை ஆணையாளர் நவநீதம்பிள்ளை மேற்கொள்ளவதற்கு எங்களிடம் எவ்வித ஆட்சேபமும் கிடையாது. இருப்பினும் பக்கச்சார்பின்றி செயற்படுத்த வேண்டும்.
இந்நிலையில் அமெரிக்கா, உள்ளிட்ட 5 நாடுகளின் ஆதரவுடன் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு மேலும் 33 நாடுகள் ஆதரவு நல்கியுள்ளன. ஐ.நா.மனித உரிமை பேரவையில் நேற்று நடத்தப்பட்ட மேற்படி பிரேரணை குறித்தான வாக்களிப்பில் ஆதரவாக 23 நாடுகளும், எதிராக 12 நாடுகளும் வாக்களித்துள்ளதுடன் மேலும் 12 நாடுகள் பிரேரணை வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன.
இதன் பிரகாரம் இப்பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகள் வாக்களித்த போதிலும் இப்பிரேரணை வாக்கெடுப்பில் புறக்கணித்தவர்களினதும் எதிரானவர்களினதும் எண்ணிக்கை ஆதரித்தவர்களினது தொகையினரைவிட அதிகமாகும்.
இதேவேளை, கடந்த முறை இதுபோன்றதொரு வாக்கெடுப்பில் 7 நாடுகள் நடுநிலை வகித்ததுடன், 13 நாடுகள் எதிராக வாக்களித்தன. ஆதரவாக 25 நாடுகள் வாக்களித்தன. இருப்பினும், குறித்த வாக்கெடுப்பில் அப்பிரேரணைக்கு ஆதரவாக 25ம், எதிராக 21 நாடுகளும் வாக்களித்திருந்தன.
ஆனால் ,ம்முறை 24 நாடுகள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்துள்ளதுடன் ஆதரவாக 23 நாடுகள் வாக்களித்ததுள்ளன. அதாவது பிரேரணை அதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டாலும், மொத்த வாக்கெடுப்பின்படி இப்பிரேரணை தோல்வி கண்டுள்ளது.
கடந்த முறை வாக்கெடுப்பின்போது இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள் இம்முறை ஆதரவாக வாக்களித்துள்ளன. அவற்றில் இந்தியா முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே இந்தியாவினுடைய ஆதரவு பெருமளவில் பாராட்டத்தக்கது.
ஆகவே, குறித்த ஐ.நா.வின் தீர்மானத்தை அமுல்படுத்துவதில் சிக்கல் உள்ளது. அதனை அமுல்படுத்துவதற்கான அதிகாரமும், அடிப்படை தகைமையும் சர்வதேசத்திடம் கிடையாது என்றார்.

















