இலங்கை அரசு சொல்வதொன்று செய்வது இன்னொன்று. இதையே நீண்டகாலமாகச் செய்துவருகின்றது. முன்னுக்குப் பின் முரணாகவே அவர்கள் செயற்பட்டு வருவதாக மனித உரிமை விவகாரங்களில் அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். ரட்ணவேல் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசினால் 424 புலம்பெயர் தமிழர்களைத் தடை செய்து வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள மேற்படி தடை தொடர்பில் பி.பி.சி. செய்திச் சேவைக்குத் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் ஒருவரின் அடிப்படை மனித உரிமையை மீறுவதாக இது அமைந்திருக்கிறது. சர்வதேச விசாரணைகள் தேவையில்லை. நாங்கள் உள்நாட்டில் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துகிறோம்.
அதற்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களையும், அமைப்புகளையும் வரவேற்கிறோம் என்று கூறிக்கொண்டு, இத்தகைய அறிவித்தல்களை வெளியிடுவதன் மூலம் முன்னுக் குப்பின் முரணாகவே அரசு செயற்படுகின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பயங்கரவாதம் மீண்டும் தலையயடுக்கக் கூடாது, மீண்டும் நாட்டில் ஒரு போர் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அரசதரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
















