வடக்கில் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் பலர் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் யாழ். பருத்தித்துறையினைச் சேர்ந்தவரும் முன்னாள் போராளியும் புனர்வாழ்வு பெற்றவருமான பத்திரிநாதன் அலன்மன்ரோ (வயது-30) என்பவர் பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.
இவர் யாழ்.பருத்தித்துறைமுனை இறங்குதுறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட ஐந்து மீனவர்களை விட மேலதிகமாகத் தேடப்பட்டு வந்த நபரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் கிளிநொச்சிக்குச் சென்று கொண்டிருக்கையில் கைது செய்யப்பட்டதாகவும் இவரையும் வவுனியாவிற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். பருத்தித்துறைமுனை இறங்குதுறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பருத்தித்துறையைச் சேர்ந்த 5 மீனவர்களை பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுசெய்து வவுனியாவிற்குக் கொண்டுசென்றனர்.
பத்திரிநாதன் ரெஜினோல்ட் (வயது 47), பத்திரிநாதன் வின்சன் பெனடிக் (வயது 38), செல்வராசா அன்ரன் இருதயராசா (வயது 32), அழகநாதன் வின்சன் மரியதாஸ் (வயது 45), நாகப்பு மிக்கல்பிள்ளை (வயது 53) ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
அவுஸ்திரேலியாவிலுள்ள புலி உறுப்பினர்களிடம் நிதியினைப் பெற்று பல நாட்கலம் ஒன்றினை கொள்வனவு செய்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டிலேயே குறித்த மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வடக்கில் ரி.ஐ.டியினரால் சுமார் 50 இற்கு மேற்பட்டவர்கள் கடந்த ஒருமாத காலத்திற்குள் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டு வரும் நிலையில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

















