வட,கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் உருவாக்கம் பெறுவதற்கான முனைப்புக்கள் உள்ளதாக இலங்கையின் பொலிஸ் பேச்சாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதன்படி இரு மாகாணங்களிலும் இதுவரை 65 இளைஞர்கள் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
கடந்த மாதத்தின் முற்பகுதியில் கிளிநொச்சி- தர்மபுரம் கிராமத்தில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டதன் பின்னர், வடகிழக்கு மாகாணங்களில் குறிப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கடுமையான தேடுதல் நடைவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் பொலிஸ் பேச்சாளர் மேற்படி தகவலை
வழங்கியிருக்கின்றார்.
அவர் வழங்கியிருக்கும் தகவலின் பிரகாரம் வடகிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் ஒருங்கிணைவதற்கான ஏது நிலைகள் உருவாகியிருப்பதாகவும் அதற்கமைய 65 போர் கைது செய்யப்பட்டு, 5 போர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் வடகிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக படையினர் சுற்றிவளைப்பக்களும், சோதனை நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
கடந்த இரு தினங்களுக்கு முன்பாக யாழ்.கோப்பாய் பகுதியில் அதிகாலை 4 மணிக்கு திடீர் சுற்றிவளைப்பு சோதனை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தேற்றாத்தீவில் மீட்கப்பட்ட சிசு, குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் துணியினால் சுற்றப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை மீட்க்கப்பட்ட சிசுவை, குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை மாலை தேற்றாத்தீவு தேவாலயத்துக்கு அருகில் வீதியின் ஓரத்தில் துணிகளினால் சுற்றப்பட்ட குழந்தையொன்றின் அழுகுரலைக்கேட்டு தேவாலயத்தில் நின்ற பெண்னொருவர், சிசுவை மீட்டு தனது வீட்டுக்கு கொண்டுசென்றுள்ளார்.
இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற பொலிஸார் குழந்தையினை மீட்டுள்ளனர்.
மீட்க்கப்பட்ட சிசு பிறந்து ஆறு நாட்களானது எனவும் பெண் சிசு எனவும் மிகவும் நல்ல உடல் நிலையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் சிசு ஒப்படைக்கப்பட்டதுடன் சிசுவினை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் குறித்த குழந்தையின் பெற்றோரை தேடிவருவதாகவும் மேலதிக விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

















