இலங்கை மனித உரிம விவகாரத்தை காரணம் காட்டி பொதுநலவாய நாடுகளுக்கான கனேடிய உதவிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கான நிதி உதவிகளை கனேடிய அரசாங்கம் ரத்து செய்துள்ளது. இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் பொதுநலவாய நாடுகள் அமைப்பு உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பொறுப்பினை இலங்கை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.மனித உரிமை, அரசியல் நல்லிணக்கம் ஆகிய விடயங்கள் தொடர்பில் இலங்கை காத்திரமான தீர்வுத் திட்டங்களை முன்வைத்துள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜொன் பெயார்ட் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளிலும் கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் பங்கேற்கவில்லை.மனித உரிமை, ஜனநயாகம், சுதந்திரம் போன்ற காரணிகளுக்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பு முன்னுரிமை அளிக்க வேண்டு;ம் என்பதே கனடாவின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகளுக்காக தன்னார்வ அடிப்படையில் கனடா வருடாந்தம் 10 மில்லியன் டொலர்களை வழங்கி வருகின்றது.எனினும், எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கான 20 மில்லியன் டொலர்களை வழங்கப் போவதில்லை என பெயார்ட் அறிவித்தள்ளார்.ரத்து செய்யப்பட்ட இந்தப் பணம், குழந்தைத் திருமணங்கள் மற்றும் மனித உரிமை மேம்பாட்டுக்காக செலவிடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
















