ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு அமைவாக முன்னெடுக்கப்படவுள்ள சர்வதேச நகர்வுகளுக்கு இலங்கை அரசு நேர்மையான முறையில் முகங்கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சருமான டலஸ் அழகப்பெரும. அரசியல் தீர்வுத்திட்ட விவாதத்தில் தென்னாபிரிக்காவின் பங்களிப்பானது நட்புரீதியானதே தவிர, மூன்றாம் தரப்பு தலையீடு அல்லவென்றும், அந்நாட்டிடம் கற்றுக்கொள்வதற்கு நிறைய விடயங்கள் இருக்கின்றன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின்படி இலங்கை அரசுக்கு எதிராக ஜூன் மாதமளவில் ஐ.நா. விசாரணை ஆரம்பிக்கப்படும் என வெளியாகியுள்ள செய்திகள், இன நெருக்கடிக்கான தீர்வு விடயத்தில் தென்னாபிரிக்காவின் பங்களிப்பு ஆகியவை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். “எதனையும் ஒழிக்கவேண்டிய தேவை அரசுக்கு இல்லை. ஆகவே, சர்வதேச நகர்வுகளுக்கு நாம் நேர்மையாக முகம்கொடுப்போம்.
பேசுவதற்கு நிறைய விடயங்கள் இருக்கின்றன. இருப்பினும், போர்க் குற்றச்சாட்டு குறித்தே பெரிதாகப் பேசப்படுகின்றது. ஜனநாயக செயற்பாடுகள், அரசின் மீளிணக்க முயற்சி ஆகியன பற்றியும் பேசுமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம். எதிர்க்கோணத்தில் பார்ப்பவர்கள் நேர்கோணத்தையும் பார்ப்பதே நல்லது உதாரணமாக, 500 செங்கற்கள் அடுக்கப்பட்டுள்ளன. இதைக் கூட இரு கோணங்களில் பார்க்கலாம். அதாவது, 498 செங்கற்கள் ஒன்றாக இருக்கின்றன என்று ஒரு கோணத்திலும் இரு செங்கற்கள் சேதமடைந்துள்ளன என்று மற்றுமொரு கோணத்திலும் கருத்துகளை முன்வைக்கலாம்.
ஆகவே, விமர்சனங்களை முன்வைப்பது போல் செயற்பாடுகளின் பெறுபேறுகளை ஏற்குமாறும் நாம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அதேவேளை, தென்னாபிரிக் காவிடம் கற்றுக்கொள்வதற்கு நிறைய விடயங்கள் இருக்கின்றன. அந்நாட்டில் 8 மொழிகள் அரச கரும மொழிகளாக இருக்கின்றன. அத்துடன், இலங்கையின் நட்பு நாடு என்ற அடிப் படையிலேயே அது தீர்வு விடயத்தைக் கையாள்வதற்கு முயற்சிக்கின்றது.
இது வீண் தலையீடோ அல்லது மூன்றாம் தரப்பின் அழுத்தமோ அல்ல. நட்பு ரீதியான அணுகுமுறையாகும். இலங்கை அனுபவங்களைப் பெறும் ஆனால், எவரும் எமக்குப் பாடம் கற்பிக்க முடியாது என்றும் அவர்கூறினார்.
















