போரில் உயிரிழந்த இராணுவத்தினரை சிங்கள மக்களால் நினைவுகூர முடியுமாயின் ஏன் தமிழர்களுக்கு தமது உறவுகளை நினைவு கூர முடியாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நவசம சமாஜக்கட்சி தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “”போரில் உயிரிழந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் உறவுகளை ஆண்டுதோறும் அவர்களுடைய குடும்பத்தவர்கள் நினைவு கூர்ந்து வருவது வழக்கம். போரில் மூவின மக்களும் உயிரிழந்தனர். இருப்பினும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் அப்பாவி தமிழ் மக்களே அதிகளவில் உயிரிழந்துள்ளனர்.
மே 18 ஆம் திகதி போர் வெற்றி கொண்டாடப்படும் அதே வேளை போரில் உயிரிழந்த இராணுவத்தினரையும் சிங்கள மக்கள் நினைவு கூருவர். இருப்பினும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உயிர் நீத்த தமது உறவுகளை நினைவு கூருவதற்கு அரசினாலும் இராணுவத்தினராலும் தொடர்ந்தும் உரிமை மறுக்கப்பட்டு வருகின்றது. தமிழர்கள் தமது உறவுகளை நினைவு கூருவதாயின் வீடுகளிலேயே நினைவு கூருவதுடன் பொது இடங்களில் நினைவு கூருவதனை அரசு தடை செய்துள்ளது.
இதனூடாக அரசு தமிழர்களுக்கு தொடர்ந்தும் அநீதி இழைத்து வருகிறது.அது போதாதென்று யாழ். பல் கலைக் கழகத்துக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. உயிர் நீத்த தமது உறவுகளை கடந்த ஆண்டு நினைவு கூர முற்பட்ட வேளை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், 13 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பில் முன்னின்று செயற்பட்டமைக்காக எனக்கும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. இம் முறை இராணுவம் மே 18ஆம் திகதிக்கு முன்பே இது தொடர்பில் உன்னிப்பாக செயற்பட்டு வருகின்றது.
இது தமிழர்களின் உரிமைகளை பறிக்கும் செயலாகவே கருத வேண்டியுள்ளது. போரில் உயிர் நீத்த உறவுகளை சிங்களவர்களுக்கு நினைவு கூர முடியுமாயின் ஏன் தமிழர்களுக்கு நினைவு கூர முடியாது?
அரசு இனவாதத்தை தூண்டும் வகையிலும் நாட்டை இரண்டாக பிளவுபடுத்தும் வகையிலேயே நடந்து கொள்கிறது. அரசின் செயற்பாடு இவ்வாறே தொடருமானால் நாட்டை பிளவுபடுத்துவதை தவிர வேறு வழியில்லை. எனவே நாட்டை இடது சாரி கட்சியினாலேயே நல்லதொரு நிலைமைக்கு கொண்டு வர முடியும்”என்று தெரிவித்துள்ளார்.
















