இலங்கையில் அனைத்து இடைநிலைக் கல்வி நிறுவனங்கள், பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பெளத்த மதத்தை திணிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தை ஈடுபடுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அஸ்கிரிய பீடத்தினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனையை நடைமுறைப் படுத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒப்புதல் அளித்துள்ளார் என்று அஸ்கிரிய பீடத்தின் பேச்சாளர் மெதகம தம்மானந்த தேரர் பிபிசியின் சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.
அனைத்து இடைநிலைக் கல்வி நிறுவனங்களிலும் பாடசாலைகளிலும் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இராணுவம் ஓர் ஆண்டு பெளத்த தலைமைத்துவ பயிற்சியை அளிக்கவுள்ளது என்று அவர் கூறினார்.
மாறுதலுக்குத் தயாராகுங்கள் என்ற தலைப்பில் முன்னெடுக் கப்படும் அந்தப் பயிற்சியின் மூலம் இளைய சமூகத்தினருக்கு மேம்பட்ட கல்வியை அளித்து, அதன் மூலம் சமூகத்தின்பால் அவர்களுக்கு உள்ள அணுகுமுறையை மாற்றுவதே இதன் நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.
நாட்டின் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் இந்தத் தலைமைத்துவப் பயிற்சித்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தப் பயிற்சி அனைத்து இன மாணவர்களுக்கும் தமது சொந்த மொழியில் அளிக்கப் படவுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்தத் திட்டம், இலங்கை இராணுவத்தை கல்வி நிர் வாகத்துக்குள் நுழைக்கவும், சிறுபான்மை மதங்கள் மீது பெளத்தத்தை திணிக்கவுமே செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
















