சிறிலங்காத் தீவுக்கு எதிராக நரேந்திர மோடியின் தலைமையிலான புதிய அரசாங்கம் கடும்போக்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முன்னர் சிறிலங்காத் தலைவர்கள் மிகத் தெளிவான வரையறையான மூலோபாயம் ஒன்றை வகுக்க வேண்டும் என சனிக்கிழமை அன்று சிறிலங்கா ஊடகமொன்று எச்சரித்துள்ளது.
“இந்தியாவின் புதிய பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஆகியோர் சிறிலங்கா மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு முன்னர் அல்லது ரஸ்ய அதிபர் விலாடிமிர் புற்றின் ‘கிறிமியா’ நாட்டிற்கு எதிராக எடுத்த நடவடிக்கைள் போல் சிறிலங்கா மீது மோடி அரசாங்கம் நடவடிக்கைகள் எடுப்பதைத் தடுப்பதற்காக சிறிலங்காத் தலைவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து மிகத் தெளிவான மூலோபாயத்தை வரைந்துகொள்ள வேண்டும்” என ‘டெய்லி மிறர்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மோடி இந்த மாதம் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட பின்னர் சில மாதங்களுக்கு சிறிலங்காவுக்கும் இந்திய மத்திய அரசாங்கத்திற்கும் இடையில் நல்லுறவு பேணப்படலாம் என பெரும்பாலான அவதானிகள் குறிப்பிடுவதாக ‘டெய்லி மிறர்’ பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“சிறிலங்கா, மலேசியா, பிஜி போன்ற தமிழ் மக்கள் வாழும் எந்தவொரு நாடும் இந்தியாவின் பகுதிகளாகும்” என கடும்போக்காளரான மோடி தெரிவித்திருந்ததாக டெய்லி மிறர் சுட்டிக்காட்டியுள்ளது. மோடியின் தலைமையிலான பா.ஜ.க அரசாங்கம் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் மிகப் பலமான வாக்குகளைப் பெற்று அடுத்த வாரம் அரசாங்கத்தைப் பொறுப்பெடுக்கவுள்ளது.
2009ல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட சிறிலங்காவின் இறுதிக்கட்ட யுத்தத்தில் பல ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து ஜெயலலிதாவின் அ.இ.அ.தி.மு.க கடும்போக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதே.
















