வடமாகாண கல்வி அமைச்சுக்கு கட்டுப்பட்டதில்லையா வலயக்கல்வி பிரிவு? குருகுலராஜாவிடம் இடித்துரைத்து ஒரு கேள்வி!

gurugularajaமுல்லைத்தீவு மாவட்ட வலயக்கல்வி பணிப்பாளர் ஒத்துழைக்காத காரணத்தினாலேயே, கடந்த 18.05.2014 அன்று உடையார்கட்டு மகாவித்தியாலயத்தில் கண் மற்றும் பார்வைக்கோளாறுகள், குறைபாடுடையவர்களுக்கான இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கும் மருத்துவ முகாமை தன்னால் நடத்த முடியாமல் போய்விட்டதாக வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி ஒருவர் குற்றம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது குற்றச்சாட்டில், இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கும் மருத்துவ முகாமுக்காக, உடையார்கட்டு மகாவித்தியாலய மண்டபத்தை பயன்படுத்துவதற்கு, வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜாவினதும், அமைச்சின் செயலாளரினதும் எழுத்து மூலமான அனுமதிகள் முறையாகப்பெறப்பட்டிருந்தும், முல்லைத்தீவு மாவட்ட வலயக்கல்வி பணிப்பாளர் அதற்கு சம்மதம் தெரிவிக்காததாலேயே மருத்துவ முகாமை நடத்த முடியாமல் போய்விட்டதாக பகிரங்கமாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமையானது, பலருக்கும் வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளதோடு, அமைச்சரின் அதிகார வரம்பையும் (ஆண்மையை) கேள்விக்குட்படுத்தியுள்ளது.

அமைச்சர் பதவி வெற்றுக்கோதா?

வன்னி நிலம் மீதான இறுதிப்போரின் போது சிறீலங்கா அரச படைகளால் கொல்லப்பட்ட உதவிக்கல்வி பணிப்பாளர் திருமதி குணலட்சுமி சிவசுந்தரத்தின் ஞாபகார்த்தமாகவே குறித்த இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கும் மருத்துவ முகாம் ஒழுங்கமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணசபை உறுப்பினர் அமைச்சரிடம் அனுமதி கோரியதற்கு அமைவாக, அமைச்சர் குருகுலராஜா கல்வி பணிப்பாளருக்கு அனுமதி வழங்குமாறு 16.05.2014 அன்று கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார். (அமைச்சரின் கடித இலக்கம் வமா/அஅ/கபவிஇ/க/11)

அன்றே வடமாகாண பிரதிக்கல்வி பணிப்பாளர் சி.புஸ்பலிங்கமும் முல்லைத்தீவு மாவட்ட வலயக்கல்வி பணிப்பாளருக்கு, மருத்துவ முகாமை நடத்துவதற்கு மகாவித்தியாலய மண்டபத்தை வழங்குமாறு அதிபரை அறிவுறுத்துமாறு கடிதம் அனுப்பியுள்ளார்.

வடமாகாண கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர், கல்வி பணிப்பாளர் இவர்களெல்லாம் அனுமதி வழங்கியும், வலயக்கல்வி பணிப்பாளர் மட்டும் அனுமதி வழங்க மறுத்து விட்டதாலேயே குறித்த மருத்துவ முகாமை 18.05.2014 அன்று நடத்த முடியாமல் ஒத்தி வைக்க நேர்ந்ததாக கூறுவது, வடமாகாண கல்வி அமைச்சின் நிர்வாக அலகையும், பதவி நிலைகளையும் கேள்விக்குட்படுத்துவது தவிர்க்க முடியாததே.

அமைச்சரிடம் முக்கிய இரு கேள்விகள்!

01. வடமாகாண கல்வி அமைச்சுக்கு கீழ் கட்டுப்பட்ட ஒரு நிர்வாக அலகு இல்லையா வலயக்கல்வி பணிமனை?

02. வடமாகாண கல்வி அமைச்சர், அமைச்சின் செயலாளர், கல்வி பணிப்பாளர் இவர்களுக்கெல்லாம் மேல்பட்ட பதவி நிலையையும், அதிகாரத்தையும் கொண்டவரா வலயக்கல்வி பணிப்பாளர்?

குறித்த இரண்டு கேள்விகளுக்கும், “இல்லை” என்ற ஒரே பதிலையே கல்வியாளர்களும், புத்திஜீவிகளும் கூறுகின்ற நிலையில் வலயக்கல்வி பணிப்பாளரை விசாரணை செய்து, அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையோ, சட்ட நடவடிக்கையோ எடுப்பாரா அமைச்சர்?

அமைச்சரால் முடியவே முடியாது!

ஏன் எதற்கு? எப்படி இது சாத்தியமாகும்? என்று நீங்கள் கேள்வி எழுப்பலாம். இந்த சம்பவத்தின் உண்மை மற்றும் பின்னணி என்னவென்றால், குறித்த வலயக்கல்வி பணிப்பாளர் வலன்டினா மாலினி, அடாவடி அமைச்சர் ரிசாட்டுக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்பதும், அமைச்சரின் செல்வாக்கு அவருக்கு அதிகம் உள்ளது என்பதும் நம்மை போன்ற சிலருக்கு மட்டுமே தெரிந்த விசயமாகும்.

வடமாகாண கல்வி அமைச்சின் ஆளுகைக்கு கீழுள்ள வலயக்கல்வி பணிமனை ஒன்றின் பணிப்பாளர், வடமாகாண கல்வி அமைச்சரின் சொல்லுக்கு கட்டுப்பட மாட்டேன் என்று வெளிப்படையாகவே கூறுவதும், முரண்டு பிடிப்பதும், அமைச்சரின் உத்தரவுகளை உதாசீனம் செய்வதும், அவமதிப்பதும் அமைச்சரின் கையாலாகாத்தனத்தையே வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.

சாதாரண ஒரு பெண் வலயக்கல்வி பணிப்பாளரிடம் தோற்றுப்போன இவர்களா, மகிந்த ராஜபக்ஸ அரசை எதிர்த்து, மீண்டும் மாவீரர் கல்லறைகளை கட்டியெழுப்ப போகின்றார்கள்? மலர் தூவ போகின்றார்கள்?

முக்கிய கவனத்துக்கு:

தமிழினப்படுகொலை நாளான (மே 18) முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுடன் குறித்த மருத்துவ முகாம் தொடர்புடையது என்பதால், எமது உறவுகளுக்கான நினைவேந்தலை அனுஸ்டிப்பது தொடர்பில் “கல்வெட்டு எழுத்து” போல் தீவிர ஆர்வமும், அதீத ஈடுபாடும் காட்டாமல், மாறாக யார் யாரெல்லாம் “ஓடுற தண்ணியில் எழுதுவது” போல தில்லுமுல்லுகள் செய்திருக்கிறார்கள் என்பதை, மக்கள் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தப்பதிவு!

-கழுகுகண்-

Tags: , , ,

Leave a Reply