கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகளில் நிலவுவதாகக் கூறப்படும் குறைபாடுகளை பட்டியலிட்ட வைத்தியர், அந்த அறிக்கையை அவுஸ்திரேலிய அதிகாரிகள் புறக்கணிக்கிறார்கள் என்று சாடியிருக்கிறார்.
boat people டொக்டர் ஜோன் போல் சங்கரன், ஏனைய மருத்துவர்கள் 14 பேருடன் இணைந்து கடந்த நவம்பர் மாதம் 92 பக்க அறிக்கையொன்றை வரைந்திருந்தார். படகுகள் மூலம் வந்தவர்களுக்கு கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாமில் வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகளின் தரம் பற்றி அறிக்கையில் விலாவாரியாக விபரிக்கப்பட்டிருந்தது.
‘எமது கரிசனைகளை 18,000 இற்கு மேற்பட்ட சொற்களில் விபரித்தபோதிலும், அதற்கு போதிய பதில் கிடைக்கவில்லை,’ என்றார், டொக்டர் சங்கரன். அவர் செவ்வாய்க்கிழமை சிட்னியில் நடைபெற்ற புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பான மாநாட்டில் உரையாற்றினார்.
கிறிஸ்மஸ் தீவிற்கு அனுப்பப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களிடம் இருந்து மருத்துவ உபகரணங்களும், ஆவணங்களும் பிரித்து வைக்கப்படுவதாக டொக்டர் சங்கரன் குறிப்பிட்டார். பிரிக்கப்படும் கருவிகளில் கண்ணாடிகள், கேட்டல் உபகரணங்கள், செயற்கைக் காலின் பாகங்கள் போன்றவையும் அடங்கும்.
















