அமெரிக்காவுடனான சோபா உடன்பாட்டினால் நாட்டின் இறைமைக்கு ஆபத்து – ஜேவிபி எச்சரிக்கை

அமெரிக்காவுடன், சோபா (SOFA) எனப்படும் படைகளின் நிலை குறித்த உடன்பாட்டில், சிறிலங்கா கையெழுத்திட்டால், நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்துள்ள ஜேவிபி, இது குறித்து நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜேவிபி உறுப்பினர் பிமல் ரத்நாயக்க,

“2007 மார்ச் 05ஆம் நாள் அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில், கையகப்படுத்தல் மற்றும் குறுக்குச் சேவைகள் உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. இது அமெரிக்கப்படைகள் சிறிலங்காவில் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் தொடர்பாடல் வசதிகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் வசதிகளை அளித்தது.

இந்த உடன்பாட்டில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், அப்போதைய அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக்கும் கையெழுத்திட்டிருந்தனர்.

எமக்குத் தெரிந்தவரை அந்த உடன்பாடு அமைச்சரவையிலோ நாடாளுமன்றத்திலோ சமர்ப்பிக்கப்படவில்லை.

இரண்டு அமெரிக்கர்களே அந்த இரகசிய உடன்பாட்டில் கையெழுத்திட்டிருந்தனர். அதற்கு, சில மாதங்களுக்குப் பின்னர் அந்த உடன்பாட்டின் விபரங்களை வெளிப்படுத்துமாறு நாங்கள் நாடாளுமன்றத்தில் கோரியிருந்தோம்.

மூன்று மாதங்களுக்குப் பின்னர், 2007 ஜூலையில், அந்த உடன்பாட்டின் ஒரு பகுதி மாத்திரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் அந்த உடன்பாட்டின் இணைப்புகள் சில உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

ஒரு சிறிய நாடாக சிறிலங்கா, சக்திவாய்ந்த நாடுகள் விரும்பும் சூழலை உருவாக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

வடக்கு தொடருந்து பாதை புனரமைப்பை இந்தியாவிடம் கொடுத்தோம். அதனால், தெற்கு தொடருந்து பாதை அமைப்பை, சீனாவிடம் கொடுக்க வேண்டியிருந்தது. மத்தலவை சீனாவுக்கு கொடுத்தோம். அதனால் பலாலியை இந்தியாவிடம் கொடுக்க வேண்டியிருந்தது.

ஒரு சக்திவாய்ந்த நாட்டிடம் நாங்கள் சரணடையும் போது, ஏனைய நாடுகளிடம் நாங்கள் மண்டியிட வேண்டியிருந்தது.

நாட்டின் இறைமையை பாதுகாக்க எமது அரசாங்கங்களுக்கு முதுகெலும்பில்லை என்றால், அவர்கள் அத்தகைய உடன்படிக்கைகளுக்குள் நுழையக் கூடாது.

ரணில் விக்கிரமசிங்க பிரதமரான போது, இந்த விவகாரத்தில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என்று உறுதியளித்தார். ஆனால் இதுவரை அவர் அவ்வாறு செய்யவில்லை.

சிறிலங்கா அதிபரும், பிரதமரும், நாடாளுமன்றத்தையும், மக்களையும் ஏமாற்றினர்.

2017, ஓகஸ்ட் 4ஆம் நாள், மீண்டும் கையகப்படுத்தல் மற்றும் குறுக்குச் சேவைகள் உடன்பாட்டில் (ACSA) கையெழுத்திட்டனர்.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் சிறிலங்கா அதிபரால் 2017 ஜூன் 30ஆம் நாள் அமைச்சரவைப் பத்திரம், சமர்ப்பிக்கப்பட்டது. ஓகஸ்ட் 4ஆம் நாள் அது கையெழுத்திடப்பட்டது.

வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர், நாட்டின் இறைமை மற்றும் பாதுகாப்பு படைகள் பற்றி உரையாற்றியிருந்தார்.

ஆனால் அவரே, அமெரிக்காவுடன் இந்த இரகசிய உடன்பாட்டைக் கையெழுத்திடுவதற்கு காரணமாக செயற்பட்டார்.

இந்த துரோக உடன்பாடு, நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறைமைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை பொறுப்புடன் நான் கூறுகிறேன்.

இந்த உடன்படிக்கை நாட்டுக்கு உகந்ததல்ல என்று முப்படைகளின் படைகள் பிரதிநிதிகள் எச்சரித்துள்ளனர். ஆனால் பாதுகாப்புப் படைகளின் தலைவரான, சிறிலங்கா அதிபர் அவர்களுடைய கருத்தைச் செவிமடுக்கவில்லை.

எந்தக் காலவரம்பும் குறிப்பிடாமலேயே இந்த உடன்பாட்டில் சிறிலங்கா அதிபர் கையெழுத்திட்டுள்ளார்.

ஏதாவதொரு தரப்பு இந்த உடன்பாட்டில் இருந்து வெளியேறுவதற்கு ஆறு மாதங்கள் அவகாசம் கொடுக்க வேண்டும் என்று ஒரு விதி உள்ளது. எனினும் அவ்வாறு வெளியேறுவதது சுலபமானது அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும்.

இப்போது, அமெரிக்காவுடன் சேபா எனப்படும் உடன்பாட்டில் கையெழுத்திட சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கிறது. இதுபற்றிய கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு பிரதிநிதிகளுக்கும், அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கும் இடையில் நடத்தப்பட்ட பல சுற்றுப் பேச்சுக்களின் பின்னர், முன்மொழியப்பட்டுள்ள இந்த உடன்பாட்டின் விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வியன்னா பிரகடனத்துக்கு அமைய இராஜதந்திர தூதரகங்களின் நிர்வாக மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு உரித்தான சலுகைகள், விலக்குகள் மற்றும் தண்டனை விலக்குரிமைகள் ஆகியவற்றை அமெரிக்க அதிகாரிகள் பெற்றுக் கொள்வார்கள்.

அமெரிக்கர்கள் சிறிலங்காவுக்குள், அமெரிக்க அடையாளத்துடன் கூட்டாகவோ தனியாகவோ நுழையவும், வெளியேறவும் முடியும். அமெரிக்காவினால் வழங்கப்பட்ட அனைத்து தொழில் உரிமங்களும், சிறிலங்காவில் செல்லுபடியாகும்.

அமெரிக்க இராணுவத்தினர் சிறிலங்காவில், அமெரிக்க இராணுவ சீருடையை அணிய அனுமதிக்கப்படுவார்கள். அவர்களின் ஆயுதங்களைக் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

அமெரிக்க படையினர் தொடர்பான அமெரிக்க ஆயுதப்படைகள் அதிகாரிகளின் ஒழுக்காற்று நடைமுறைகளை சிறிலங்கா அரசாங்கம் அங்கீகரிக்கும்.

சிறிலங்காவில் இருந்தாலும், அமெரிக்கப் படையினர் மீது அமெரிக்க குற்றவியல் நடைமுறைகளுக்கு அமையவே நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவர்கள் எமது நாட்டின் சட்டத்தின் கீழ் இருக்கமாட்டார்கள் என்பதே இதன் அர்த்தம்.

எனவே, அவர்கள் இங்கே என்ன செய்தாலும், அவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது.

அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட கையகப்படுத்தல் மற்றும் குறுக்குச் சேவைகள் உடன்பாட்டை அரசாங்கம் முழுமையாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

அமெரிக்காவுடன் சோபா உடன்பாட்டில் கையெழுத்திட முன்னர் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!