அதிரடிப்படை இலங்கை இராணுவத்தின் ஒரு பிரிவே! அவர்கள் காவல்துறையல்ல – சிவாஜிலிங்கம்

sivajilingamயாழ்ப்பாணத்தில் களமிறக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினர் இலங்கை இராணுவத்தின் ஒரு பிரிவினரே. அவர்கள் இலங்கை காவல்துறையின் அன்றாட கடமைகளை ஆற்றுபவர்கள் அல்லரென தெரிவித்துள்ளார் வடமாகாணசபையின் கூட்டமைப்பு உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம்.

யாழ்.ஊடக அமையத்தில் அவர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டினில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையினிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கடமையாற்றிவரும் இலங்கை காவற்துறைக்கு மேலதிகமாக தற்போது அதிரடிப்படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். 13 வது திருத்த சட்டபிரகாரம் அமைந்த மாகாணசபைக்கு காணி பொலிஸ் அதிகாரங்களும் உண்டு. அவ்வகையில் வடக்கு மாகாணசபைக்கான காவல்துறையினை தோற்றுவிப்பது தொடர்பான நியதிச்சட்டம் அடுத்துவரும் ஓரிரு மாதங்களுள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும். காவல்துறையில் அதிகாரம் ஏதுமில்லாத போக்குவரத்து கண்காணிப்பு போன்றவற்றினை வடக்கு மாகாணசபைக்கு தர அரசு எண்ணியுள்ளதாக அறிகின்றோம். அவ்வாறான உப்புச்சப்பற்ற காவல்துறை வடக்கு மாகாணசபைக்கு தேவையில்லை.

யாழ்ப்பாணத்திற்கு தருவிக்கப்பட்டுள்ள விசேட அதிரடிப்படைக்கும் காவல் துறைக்கும் தொடர்புகள் ஏதுமில்லை. இந்த விசேட அதிரடிப்படை இலங்கை இராணுவத்தின் ஒரு பிரிவே. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் மகனால் உருவாக்கப்பட்ட இப்பிரிவு கிழக்கில் செய்தவை தமிழ் மக்களால் மறக்கப்படமுடியாதவையெனவும் அவர் மேலும் தெரிவித்தார். காவல்துறை அதிகாரங்களை வழங்குவது பற்றி பேசிக்கொண்டு விசேட அதிரடிப்படையினை களமிறக்குவது சந்தேகத்திடமானதெனவும் மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையினில் அவர் தெரிவித்திருந்தார்.

Tags: , ,

Leave a Reply