மாத்தளை கோயிற் காணி போலி பத்திரத்தினூடாக பிரான்சில் இருப்பவருக்கு விற்பனை

mathalai-templeநாட்டில் பல இடங்களிலும் பெறுமதியான காணிகளை, போலி காணி உறுதிப்பத்திரங்களுடாக விற்பனை செய்து பல கோடி ரூபாய்களை மோசடியான முறையில் பெற்று வந்த குழு தொடர்பில் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

மாத்தளையிலுள்ள, கோடிக்கணக்கில் பெறுமதியான காணியன்று இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. ஒரு குழுவாக இணைந்தே இந்த காணி மோசடி முன்னெடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கபட்டுள்ளதாக சிறீலங்கா இரகசியக் காவல்துறையினர் தெரிவித்தனர். மாத்தளை, மந்தண்டாவளை ஆதிலட்சுமி கோயிலும் முற்றாக அழிக்கப்பட்டு, அந்த கோவிலிருந்த காணி துண்டாடப்பட்டு போலி காணி உறுதிப்பத்திரங்களுடாக, இந்தக் குழு விற்பனை செய்ய முயற்சித்தமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த மோசடி தொடர்பில், புத்தசாசன மற்றும் சமய நடவடிக்கைகள் அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மத விவகாரங்களுக்கான காவல்துறைப் பிரிவிற்கு பல தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலின் காணி, போலி காணி உறுதிப்பத்திரத்தினூடாக தற்போது பிரான்சில் வசித்து வருகின்ற ஒருவருக்கு போலியான முறையில் விற்கப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்தக் கோயில் காணி 556 ஏக்கர் பரப்புடையது. 1983ம் ஆண்டு இடம்பெற்ற பிரச்சினைகளின் போது இந்தக்காணியின் உரிமையாளர் தன்னுடைய பிள்ளைகள், குடும்பத்தாருடன் பாதுகாப்பிற்காக இந்தியாவுக்கு சென்றுள்ளார். அண்மையில் அவர் நாட்டுக்கு திரும்பி தன்னுடைய இடம் தொடர்பில் தேடிப்பார்த்தபோது, கோவில் உடைக்கப்பட்டு காணி துண்டாடப்பட்டதை அவர் தெரிந்து கொண்டார். அதன் பின்னர் காணி உரிமையாளர் மாத்தளை காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்தே இந்த மோசடி வெளியாகியுள்ளது.

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற காணி மோசடிகள் இந்தக் குழுவினராலேயே மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடமும் முறைப்பாடு செய்யப்பட்டபோதும் நடவடிக்கை எவையும் எடுக்கப்படவில்லை எனத் தெரியவருகிறது.

Tags: , , ,

Leave a Reply