மக்களின் சாட்சியமளிக்கும் உரிமையை அரசாங்கத்தால் பறிக்க முடியாது. அவ்வாறு செய்ய முனைவது அடிப்படை உரிமை மீறலாகும் என தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, ஐ.நா. விசாரணைக் குழு அல்ல எந்தவொரு விசாரணைக் குழுவுக்கும் சாட்சியமளிக்க விரும்புவோர் சாட்சியமளிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
ஐ.நா. சர்வதேச விசாரணைக் குழுவுக்கு சாட்சியமளிப்போர் கைது செய்யப்படுவார்கள் என அரச தரப்பு வெளியிட்ட செய்தி தொடர்பாக கேட்ட போதே சமூக ஒருமை
ப்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;
தாம் கண்ணால் கண்ட விடயத்தை சாட்சியமாக வழங்குவதற்கு ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை உண்டு. அதனை அரசாங்கமோ அல்லது வேறு எவராவது தட்டிப் பறிக்க முனைவார்களானால் அது அடிப்படை உரிமை மீறலாகும். இதனை ஏற்க முடியாது.
ஐ.நா. சர்வதேச விசாரணையாகட்டும் உள்ளூர் விசாரணையாகட்டும் அதில் சாட்சியங்களை வழங்க தடை விதிக்கலாகாது. இலங்கை தொடர்பில் விசாரிப்பதற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை சர்வதேச குழு அமைத்ததை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதேவேளை, அக்குழு இலங்கைக்கு வருவதையும் எதிர்க்கின்றோம். ஆனால் எவராவது ஒருவர் அக்குழுவுக்கு சாட்சியமளிக்க விரும்பினால் அதற்கு தடை விதிக்கக்கூடாது.
அது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. எனவே, அரசாங்கம் இவ்விடயத்தில் பிழையான அணுகு முறையை கையாள முனைவதை கைவிட வேண்டும் என்றார்.
















