அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அமைச்சரவைக்குள் அத்துமீறி நுழைந்த பொதுபல சேனா அமைப்பினரை இனம் காண முடியவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜாதிக பல சேனாவின் தலைவர் வட்டரெக்க விஜித தேரரை தேடி அமைச்சர் ரிசாதின் அமைச்சு அலுவலகத்திற்குள் அண்மையில் பொதுபல சேனாவினர் அத்துமீறி நுழைந்திருந்தனர். விஜித தேரர் மறைந்து இருப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்து அங்கு இருக்கும் ஒவ்வொரு அறையையும் சோதனையிட்டனர் .
இந்த அத்துமீறல் தொடர்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பொது பல சேனாவினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது . இதன்போது நீதிபதி ஊடகங்களில் வெளிவந்த வீடியோ ஆதாரங்களை பெற்று நீதி மன்றுக்கு பொலிஸார் அறிக்கை ஒன்றை கையளிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார் . இதற்கு அமைய ஆறு ஊடக நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட வீடியோ பதிவுகள் பொலிஸாரினால் ஆராயப் பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிமன்றில் ஆஜராகிய பொலிஸார் தம்மால் அந்த வீடியோ பதிவுகளில் உள்ளவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக கிராண்ட்பாஸ் மஸ்ஜித் மீது கடும்போக்கு வாதிகள் தாக்குதல் நடாத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவுகளை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தார். இந்தச் சம்பவத்தின் போதும் வீடியோவில் இருப்பவர்களை தம்மால் அடையாளம் காணமுடியவில்லை என்று மழுப்பலான பதிலையே பொலிஸார் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
















