போருக்கு பின்னர் தமிழ் மக்கள் எதிர்பார்த்த உருப்படியான அபிவிருத்தியும் இடம்பெறவில்லை, நிரந்தரமான அரசியல் தீர்வும் எட்டப்படவில்லை. தமிழ் தேசியக்கூட்டமைப்பை பொறுத்த வரையில் நிரந்தரமான அரசியல் தீர்வின் ஊடாகவே முழுமையான அபிவிருத்தியை காணமுடியும் என்று எண்ணுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
மாந்தை மேற்கு பிரதேசசபையினால் அடம்பன் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானத்தின் திறப்பு விழாவில் (28.06.2014 அன்று) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,
வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்ய பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி தேவைப்படுகின்றது. அந்த நிதியை இந்த அரசாங்கத்தினால் இலங்கைக்குள் நிரந்தர அரசியல் தீர்வை காணாமல் எங்கிருந்தும் பெற முடியாது. ஆனால் போரை வெற்றி கொண்டது போல சர்வதேச சமுகத்தையும் வெற்றி கொண்டுவிட முடியும் என்று இந்த அரசு தப்பு கணக்கு போடுகின்றது. தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வை காணாத வரைக்கும் சர்வதேச சமுகத்தை வெற்றி கொள்ள முடியாது என்பதே உண்மை நிலையாகும்.
ஜெனிவா தீர்மானத்துக்கு பின்னர் சர்வதேச சமுகம், சிறீலங்கா அரசாங்கத்தால் இறுதி கட்ட போரில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை விசாரணை செய்வதற்கென நிபுணர்களை அனுப்பி, தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை காண்பதற்கு முயற்சிக்கும் இந்த சந்தர்ப்பத்தை, தமிழ் தேசியக்கூட்டமைப்பினராகிய தாங்கள் சரியாக பயன்படுத்தி தீர்வை பெற்றுத்தருவதற்கும், அதனோடு இணைந்த அபிவிருத்திக்கும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து பயணித்துக்கொண்டிருக்கும் வேளையில் மக்களுடைய பங்களிப்பும் அதற்கு தேவைப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் இறுதிகட்ட போரில் மாந்தை மேற்கு பிரதேசத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் முள்ளிவாய்க்கால் வரை சென்று உயிரிழப்புகளையும், சொத்தழிவுகளையும் சந்தித்து மீண்டும் மீளக்குடியேறியுள்ள நிலையில், பல்வேறு அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருப்பதாகவும், வீட்டுத்திட்டம் வழங்கப்படாமை, பாதைகள் சீரின்மை, மின்சாரம் மற்றும் போக்குவரத்து வசதிகள் இன்மை, வீட்டுத்திட்டத்துக்கான பயனாளிகள் தெரிவில் முறைகேடுகள், இலஞ்சம் கோரப்படுகின்றமை, வீட்டுத்திட்டத்துக்கு தேவையான மணலுக்கு அதி கூடிய விலை வசூலிக்கப்படுகின்றமை, காணிகள் அபகரிப்பு என்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து கொண்டிருப்பதாகவும்,
மாந்தை மேற்கு பிரதேச உதவி அரசாங்க அதிபர், அரச மற்றும் தனியார் காணிகளை யார் யாரையோ திருப்திபடுத்துவதற்காக முறையற்ற ரீதியில் சுவீகரித்து வரும் அதேவேளை, வன்னி மாவட்ட அமைச்சர் ஒருவரின் பெயரை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு மணல் கிரவல் கருங்கற்கள் மரங்கள் போன்ற வளங்களை கொள்ளையடித்து சட்டவிரோதமான கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு, அவற்றை கட்டுப்பாடற்ற விலையிலும் தரகர்கள் மூலம் விற்பனை செய்து வருவதாகவும், அவரது இந்த மோசடி வியாபாரத்தால் பொதுமக்கள் தமது வீட்டுத்திட்டத்துக்கு தேவையான மணலுக்கு (உழவு இயந்திர பெட்டி ஒன்றுக்கு 2,000 ரூபா செலவழிக்க வேண்டிய இடத்தில்) 4,500 ரூபா செலவழிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
போரினால் மோசமாக பாதிக்கப்பட்டு மீளக்குடியேறியுள்ள மக்களை மேலும் பொருளாதார ரீதியாக நலிவுறச்செய்யும், அழுத்தி பாரம் சுமக்க வைக்கும் மாந்தை மேற்கு பிரதேச உதவி அரசாங்க அதிபர் தொடர்பாக பல முறைப்பாடுகள் தம்மால் நாடாளுமன்றத்திலும், அமைச்சுக்கும் தெரியப்படுத்தியும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
















