ஸ்கொட் மொரிசனுக்கு இலங்கையிடம் இருந்து பெறுமதியான பரிசு
அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனுக்கு இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பிளாட்டின முலாம் இடப்பட்ட அலங்கார மட்பாண்டங்களை பரிசளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற அங்கத்தவர்களது பதிவேட்டின் ஊடாக மக்களவையில் மேற்கொண்ட சொத்துப் பிரகடனத்தில் ஸ்கொட் மொரிசன் பெற்ற பரிசு பற்றிய விபரங்கள் இடம்பெற்றுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி கன்பராவில் நடைபெற்ற அவுஸ்திரேலிய – இலங்கை கூட்டு செயற்குழுவின் கூட்டத்தில் Noritake Odessa Platinum Tea Set மட்பாண்டத் தொகுதியை பரிசாகப் பெற்றதாக திரு.மொரிசன் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற விதிமுறைகளின் பிரகாரம், நாடாளுமன்ற பொதுப்பண சேகரிப்பாளருக்கு 4 டொலர்கள் 30 சதங்களை மாத்திரம் செலுத்தி பரிசை தாமே வைத்துக் கொள்வதென மொரிசன் தீர்மானித்ததாகத் தெரிகிறது.
அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிய இரு படகுகளைக் (ACV Corio Bay and ACV Hervey Bay) கையளிக்கும் நிகழ்ச்சியின்போது, பரிசுப் பொருள் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பரிசு மற்றும் இதனைத் தம்மிடம் வைத்திருப்பதற்காக திரு.மொரிசன் நாடாளுமன்றத்திற்கு செலுத்திய குறைந்த தொகையுடன் தொடர்புடைய சம்பவங்களுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றியும், இலங்கையின் புகலிடக் கோரிக்கையாளர்கள் 41 பேரை திருப்பி ஒப்படைத்தமை தொடர்பில் திரு.கோட்டாபய ராஜபக்ஷவின் பங்களிப்பு பற்றியும் அறிவதற்காக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சிடம் தொடர்பு கொண்ட சமயத்தில், எதுவித பதிலும் கிடைக்கவில்லையென http://www.thedeadlynewt.com என்ற இணையத்தளம் அறிவித்துள்ளது.
















