வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் 84 ஆயிரம் இளம் பெண்கள் கணவனை இழந்திருக்கின்றனர் என்று அரச புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் போரின் போது 84 ஆயிரம் ஆண்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்பதை அரசே ஒப்புக்கொள்கிறது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற எழுச்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் இரண்டு லட்சம் இராணுவம் உள்ளது. அதில் வடக்கில் ஒன்றரை லட்சம் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர்.
ஆனால் வடக்கு மாகாணத்தில் பத்து லட்சம் மக்கள்தான் இருக்கின்றார்கள். இந்த மக்கள் தொகைக்கு இவ்வளவு இராணுவத்தினர் தேவைதானா என்பதைத்தான் நாங்கள் கேட்கிறோம். யாழ் மாவட்டத்தில் ஏறத்தாழ 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீளக் குடியேற்றப்பட வேண்டியுள்ளனர். இதில் பெரும் பாலானவர்கள் மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வாழ்வாதாரத்துக் காகக் கடலுக்குத்தான் செல்ல வேண்டும். ஆனால் அவர்களது வீடுகளிலும் தொழிலிடங்களிலும் இராணுவம் குடிகொண்டுள்ளது.- என்றார்.
















