“ஐநா மனித உரிமை கவுன்சிலில் நான் சமர்ப்பித்த அறிக்கை குறித்து இன்னமும் உறுதியாக இருக்கிறேன்” – நவநீதம் பிள்ளை

navanethem-pillay9இலங்கை தொடர்பாக கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் தான் சமர்ப்பித்த அறிக்கை குறித்து இன்னமும் தான் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ள மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை, அது பிரச்சாரம் என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ளார்.

இலங்கை தன்னை புனர்நிர்மானம் செய்து கொண்டு முன்னோக்கி நகர முயல்வது உண்மை, ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் கேள்விகளுக்கு தீர்வு காண வேண்டும்,ஆகவே இது பிரச்சாரம் என்பதை நான் நிராகரிப்பேன்,என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ நா செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவின் அறிக்கையிலும், தன்னுடைய அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையிலும் காணப்படுவதை ஏற்றுக்கொண்டுள்ள நவிபிள்ளை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக அமுல்படுத்துமாறு அரசாங்கத்தை கேட்டோம் அரசு அதனையும் செய்ய தவறிவிட்டது என நவி பிள்ளை தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பிலான அறிக்கை சரியானதே – நவனீதம்பிள்ளை

இலங்கை தொடர்பிலான அறிக்கை சரியானதே என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது, நவனீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் ஓர் அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

இந்த அறிக்கையானது எந்தவொரு தரப்பினரதும் பிரச்சார நோக்கிற்காக சமர்ப்பிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பிரபல சர்வதேச செய்தி ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்ட சில விடயங்கள் தமது அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முன்னோக்கி நகர்வதற்கு புனரமைப்புப் பணிகள் முக்கியமானது என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது என்ற போதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குவதும் இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில உண்மைகள் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாகவும் பல தடவைகள் இந்த விடயங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை முழமையாக அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை இதுவரையில் பூர்த்தி செய்யப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள், மதகுருமார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நெருக்குதல்களுக்கு உள்ளாவதாகவும் தமது பதவிக் காலத்தில் இடம்பெற்ற மோசமான சம்பவங்களில் ஒன்றாக இதனைக் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே சர்வதேச அழுத்தங்கள் சர்வதேச பார்வை இலங்கை மீது அவசியம் என தாம் வலியுறுத்தி வருவதாக நவனீதம்பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply