இரக்கமற்ற தம்பதியினரை மன்னிக்கும் இதயமுள்ள பெண்!

thai_womenதன்னை ஏமாற்றிய அவுஸ்திரேலிய தம்பதி மீது கோபமில்லை என தாய்லாந்து வாடகைத் தாயொருவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய தம்பதிகளுக்கு வாடகைத் தாயாக செயற்பட்டு இரு பிள்ளைகளை பெற்றெடுத்த தாய்லாந்து பெண்ணொருவர் இதுகுறித்து கூறுகையில், தமது கருக்களை சுமக்கச் செய்து ஆரோக்கியமான பெண்குழந்தையை எடுத்துச் சென்று, நோயாளி ஆண்குழந்தையைத் தம்மிடம் விட்டுச் சென்ற அவுஸ்திரேலிய தம்பதி மீது தமக்கு கோபம் கிடையாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்து ஸ்ரீசாச்சா என்ற நகரைச் சேர்ந்த 21 வயதான பட்டாராமன் சனுபா, அவுஸ்திரேலிய தம்பதியின் கருக்களை தமது வயிற்றில் சுமந்தார். இதற்காக அவருக்கு 16,000 டொலர் வழங்கப் போவதாக அவுஸ்திரேலிய தம்பதி உறுதியளித்தது.

இவர்மூலம் பிறந்த ஆண்குழந்தைக்கு கெமி என்ற பெயரைச் சூட்டி அவரை அன்புடன் வளர்த்து வருகிறார் வாடகைத் தாயான சனுபா.

டோவ்ன் சின்ட்ரோம் என்ற வளர்ச்சிக் குறைபாட்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கெமி, இருதயத்தில் துவாரத்தால் அவதிப்படுகின்றான். இந்தக் குழந்தை அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.

இரு பிள்ளைகளும் பிறந்தவுடன் ஒருதடவை அவுஸ்திரேலிய தம்பதியை சந்தித்ததாகவும், அவர்கள் மேற்கு அவுஸ்திரேலியாவில் வாழ்கிறார்கள் என்பதை மாத்திரம் தாம் அறிந்து வைத்துள்ளதாகவும் சனுபா தெரிவித்தார்.

மேலும், அவர்கள் மீது எனக்கு கோபமும் இல்லை, அவர்களை மன்னிப்பதற்கு எப்போதும் விரும்புகிறேன் என்றும் எனது குடும்பம் கெமியின் மீது எவ்வளவு அன்பு காட்டுகிறதோ, அதேபோன்று பெண்குழந்தையை அவர்கள் அன்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Tags: ,

Leave a Reply