முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு தேவிபுரம் அ பகுதியில் “பூபதி” மூத்த பிரஜைகள் இல்லத்தை வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இன்று (09.08.2014 அன்று) திறந்து வைத்தார்.
கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கருத்துரை வழங்கிய சிவசக்தி ஆனந்தன் தனது உரையில்,
எமது மண்ணில் நடைபெற்ற போர்களில் தமது பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும், உறவுகளையும் இழந்தவர்களாக மூத்த பிரஜைகள் உள்ளனர்.
எமது மண்ணின் கதை சொல்லிகளாகவும், எமது தேசத்தின் வரலாற்றை இனி வரவுள்ள சந்ததியினருக்கு கையளிக்கும் காலக்கடத்திகளாகவும் எமது மண்ணின் மூத்த பிரஜைகளே உள்ளனர்.
மிகப்பெரும் வலிகள், இழப்புகள், அவலங்களை நேரில் உய்த்துணர்ந்த இவர்களிடம் ஏராளம் அநுபவ கதைகளும் உண்டு. கூடவே சோகங்களும் உண்டு. மூத்த பிரஜைகளுக்கு உரிய மதிப்பளித்து அவர்களை தேசத்தின் அரும்பெரும் சொத்தாக பராமரிக்க வேண்டிய பெரும் பொறுப்பு ஒவ்வொரு பிரஜைக்கும் உரியதே. இந்த கடமையிலிருந்து எவரும் விலகியிருந்து விட முடியாது.
மூத்த பிரஜைகளிடமிருந்து இன்றுள்ள இளம் தலைமுறையினர் கற்றுக்கொள்ள ஏராளமான விடையங்கள் உண்டு. தொடர் இடம்பெயர்வுகள், இழப்புகளுக்கு பின்னரும், தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகள், வாழ்க்கை சுமைகள், உறவு நிலை பிரிவுகள், ஒதுக்கல்கள், மன அழுத்தங்களுக்கு மத்தியிலும் நிகழ்காலத்தில் சீவிக்கும் மூத்த பிரஜைகளின் மனவலிமையிலிருந்து இளம் சந்ததியினர் வாழ்க்கையை வாழப்பழகிக்கொள்ள வேண்டும்.
“பகிர்ந்து கொள்ளும் துன்பம் பாதியாகிறது. பகிர்ந்து கொள்ளும் இன்பம் இரட்டிப்பாகிறது” என்பார்கள். இறுதி கட்டப்போரில் தமது பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும், உறவுகளையும் பறி கொடுத்து மனதை அழுத்தும் கவலைகள் துன்பங்கள் துயரங்களை பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில் மூத்த பிரஜைகள் உள்ளனர்.
இந்த பிரதேசத்தில் இன்னோரன்ன பல சமுக மற்றும் தனிநபர் பிரச்சினைகளோடு வாழும் மூத்த பிரஜைகள் இந்த “பூபதி” இல்லத்தை நூலகமாகவும், பத்திரிகை செய்திகளை படிக்கும் வாசிகசாலையாகவும், சனசமுக நிலையமாகவும், பொதுநோக்கு மண்டபமாகவும், தமது சக துக்க துயரங்களை பகிர்ந்து கொள்ளும் இளைப்பாறுதல் மண்டபமாகவும் பயன்படுத்தி கொள்ள முடியும்.
இத்தகைய வாய்ப்பை அளித்த ராஜபூபதி அதாவது பூபதி ரீச்சர் அவர்களின் புதல்வர் பிரான்ஸில் வசிக்கும் மோகனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், ரீ.ஆர்.ரீ வானொலிக்கும், தேவிபுரம் மூத்த பிரஜைகளின் சார்பில் மனம் நிறைந்த நன்றிகளை கூறுவதாகவும் தெரிவித்தார்.
பிரான்ஸ்ஸை தளமாகக்கொண்டியங்கும் ரி.ஆர்.ரி (TRT) வானொலி மற்றும் பிரான்ஸில் வசிக்கும் ஜெட் மார்க்கெட் உரிமையாளரான இராஜபூபதியின் மகன் மோகன் அவர்களினதும் நிதி பங்களிப்புடன் நிறுவப்பட்ட “பூபதி” மூத்த பிரஜைகள் இல்லத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கும் குறித்த நிகழ்ச்சி திருமதி அருந்ததி சிவசக்தி ஆனந்தனின் ஒழுங்கமைப்பில் ஓய்வு பெற்ற துணுக்காய் கல்வி வலய பணிப்பாளர் சிதம்பரபிள்ளை பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராகலிங்கம், வடமாகாண போக்குவரத்துத்துறை அமைச்சர் டெனிஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர்கள் சி.சிவமோகன், து.ரவிகரன், மேரி கமலா குணசீலன், கனகசுந்தரசுவாமி, கூட்டமைப்பின் பிரமுகர் கந்தையா சிவநேசன் (பவான்), துணுக்காய் பிரதேசசபை உறுப்பினர் அமிர்தலிங்கம் (அப்பன்) கூட்டமைப்பின் லண்டன் கிளை உறுப்பினர் கு.மனோகர் (பிரபு) உள்பட பிரதேசவாசிகள் பலரும் கலந்து கொண்டனர்.
















