கடந்த காலங்களில் எமது மண்ணில் நடைபெற்ற தாக்குதல்களினால் இழப்புகளோடும், வலிகளோடும் இன்றுவரை நாம் அநுபவித்து வரும் துன்ப துயரங்களிலிருந்து மீள வேண்டுமாக இருந்தால், பெற்றோர்கள் தம் பிள்ளைகளை பாடசாலைக்கல்வி கற்றல் செயல்பாடுகளிலிருந்து இடைவிலகிவிடாமல் கண்காணித்துக்கொள்ள வேண்டும். இன்று நாம் சுமக்கும் சுமைகளை நாளை எமது பிள்ளைகளும் சுமக்காமல் வளமான வாழ்வு வாழ வேண்டும் எனும் விருப்பம் உங்களிடத்தில் குடிகொண்டிருந்தால், அதற்காக வலிகளை தாங்கி உங்கள் பிள்ளைகளின் கல்வியில் கூடிய கவனம் செலுத்தி அவர்களை சமுகத்தில் நல்பிரஜைகளாக்க சகல முயற்சிகளையும் பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டும்.
கல்வியே எமது மூலதனம். கல்வியே எமது அழிக்க முடியாத ஒரேயொரு பெரும் சொத்து. அதுவே எம்மை ஆளவும், வாழவும் செய்யும். இதை கவனத்தில் கொண்டே புலம்பெயர்ந்து வாழும் மக்களின் நிதிப்பங்களிப்போடு கற்றல் உபகரணங்களை கையளித்திருக்கிறோம். இந்த தூரநோக்கு சிந்தனையில் நிதி உதவி வழங்கிய ரி.ஆர்.ரி வானொலிக்கும், அந்த வானொலியின் நேயர்களுக்கும் விளக்குவைத்தகுளம் மக்களும், நாமும் நன்றி தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
மகிழங்குளம் கிராம சேவையாளர் பிரிவு விளக்குவைத்தகுள கிராமத்தைச்சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்விலேயே வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு கூறியுள்ளார்.
விளக்குவைத்தகுளம் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் தலைவர் ஞானசேகரம் தலைமையில் இன்று (13.08.2014 அன்று) நடைபெற்ற இந்த நிகழ்வில் 65,700 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் (பாதணிகள், புத்தகப்பைகள், அப்பியாசக்கொப்பிகள் என்பன) வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 28 மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
பிரான்ஸ்ஸை தளமாகக்கொண்டியங்கும் ரி.ஆர்.ரி வானொலியினதும், அதன் நேயர்களினதும் நிதிப்பங்களிப்பில் கொள்வனவு செய்யப்பட்ட கற்றல் உபகரணங்களை, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்கள் இந்திரராசா, தியாகராசா, வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் தவிசாளர் சிவலிங்கம், திருமதி அருந்ததி சிவசக்தி ஆனந்தன், கிராமத்தின் மாதர் அபிவிருத்திச்சங்க தலைவி சுமதி, கிராம அபிவிருத்திச்சங்கத்தின் செயலாளர் கணேசலிங்கம் ஆகியோர் மாணவர்களுக்கு கையளித்தனர்.
விளக்குவைத்தகுளம் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் தலைவர் ஞானசேகரம் தலைமையுரையில்,
2011ம் வருடம் டிசம்பர் மீளக்குடியேற்றப்பட்டதாகவும், மீளக்குடியேற்றப்பட்ட 58 குடும்பங்களும் எவ்வித அடிப்படை வசதிகளும், வாழ்வாதார உதவிகளும் இன்றி வாழ்ந்து வருவதாகவும், தமது காணிகளை தாமே துப்பரவு செய்து தற்காலிக கொட்டில்களை அமைத்திருப்பதாகவும், வீட்டுத்திட்டம், வீதி புனரமைப்பு, மின்சாரம், குடிநீர் போன்ற அத்தியாவசிய வசதிகள் இன்றி அவஸ்தைகளுடன் தாம் சீவித்து வருவதாகவும், தமது தேவைகளை பூர்த்தி செய்து தரும்படி கூட்டமைப்பு பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் தென்னிலங்கையிலிருந்து கொண்டு வந்து விடப்பட்டுள்ள காட்டு யானைகளால் தமது இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரவு வேளைகளில் ஊருக்குள் புகுந்து விடும் யானைகளை விரட்ட ஒலி எழுப்பினால் ஒலி எழுப்படும் திசையை நோக்கி யானைகள் விரைந்து வந்து தம்மை தாக்குவதாகவும், இதனால் தாம் அச்சத்துடன் ஆபத்தான சூழலில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், யானைகளின் தொல்லைகளிலிருந்து தம்மை விடுவிக்குமாறும் கிராம மக்கள் கூட்டமைப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















