சிறீலங்கா கொழும்பிலிருந்து வெளிவரும் “தமிழ்தந்தி” வாரப்பத்திரிகைக்கு சமகால நிலைவரங்கள் தொடர்பில் சிவசக்தி ஆனந்தன் வழங்கிய நேர்காணல்!

sivasakthy-ananthanசிறீலங்கா கொழும்பிலிருந்து வெளிவரும் “தமிழ்தந்தி” வாரப்பத்திரிகைக்கு சமகால நிலைவரங்கள் தொடர்பில் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வழங்கிய நேர்காணல்!

கேள்வி :
வட பகுதியில், குறிப்பாக வன்னியில் இடம்பெறும் காணிச்சுவீகரிப்புகள், பலவந்தமான காணிக் கையகப்படுத்தல்கள் மற்றும் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் பற்றி என்ன கூறுகிறீர்கள்? இதைத்தடுப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன?

பதில்:
உங்களது கேள்வியிலிருந்தே வடக்கிலும் குறிப்பாக வன்னியிலும் பலவந்தமான காணி அபகரிப்புகள் நடைபெறுகின்றன என்பது தெளிவாக நிரூபணமாகின்றது. இங்கு நான் சில விடயங்களைச் சுட்டிக்காட்டலாம் என்று நினைக்கின்றேன்.

2009ஆம் ஆண்டின் புள்ளிவிபரக்கையேட்டின் அடிப்படையில்,
வவுனியா பிரதேச செயலகப்பகுதிக்குள் 609.7 சதுர கி.மீற்றரும், வவுனியா தெற்கு பிரதேச செயலகப்பகுதியில் 188.5 சதுர கி.மீற்றரும், வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலகப்பகுதியில் 399.1 சதுர கி.மீற்றரும், வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பகுதியில் 769.6 சதுர கி.மீற்றர் நிலமும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகப்பிரிவிற்கான காணி அபகரிப்பு!

வவுனியா பிரதேச செயலகப்பிரிவிலிருந்து 19.40 சதுர கி.மீற்றரும், வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலகப்பிரிவிலிருந்து 4.40 சதுர கி.மீற்றரும், வவுனியா வடக்கிலிருந்து 23.6 சதுர கி.மீற்றரும் மொத்தமாக (0.10 சதுர கி.மீ. வித்தியாசம்) 47.30 சதுர கி.மீ (4730 ஹெக்டெயர்) நிலம் பறித்தெடுக்கப்பட்டு வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகப்பிரிவுடன் சேர்க்கப்பட்டு அதன் மொத்த நிலப்பரப்பு 235.90 சதுர கி.மீற்றர் ஆக கூட்டப்பட்டுள்ளது. அதாவது 2009ஆம் ஆண்டளவில் மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 9.6வீதமாக இருந்த வவுனியா தெற்கு பிரதேச செயலகப்பிரிவு 2013ஆம் ஆண்டளவில் 11.99 வீதமாக உயரத்தப்பட்டுள்ளது. இது தவிரவும் வவுனியா மாவட்டத்தின் தமிழர் பிரதேசங்களில் இராணுவத்தினருக்கென்றும் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.

இதனைப் போன்றே முல்லைத்தீவில் 2012ஆம் ஆண்டின் கையேட்டில் 9 கிராம அலுவலர் பிரிவுகளின் கீழ் 18 கிராமங்களுடன் வெலிஓயா (மணலாறு) பிரதேச செயலகப்பிரிவு சேர்க்கப்பட்டு புதுக்குடியிருப்பில் ஒரு கிராமம் குறைக்கப்பட்டு மொத்த கிராமங்களின் எண்ணிக்கை 634 என்று குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் 2013ஆம் ஆண்டின் கையேட்டில் வெலிஓயாவில் 17கிராமங்கள் மட்டுமே உள்ளடக்கப்பட்டு மாவட்டத்தின் மொத்த கிராமங்கள் 632 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் மாவட்டத்தின் உத்தியோகபூர்வ வரைபடத்தில் வெலிஓயாவிற்கான எல்லைகள் குறிக்கப்படவோ அல்லது வரையறுக்கப்படவோ இல்லை. இது தவிரவும் முல்லைத்தீவில் தனியார் மற்றும் பொதுக்காணிகள் இராணுவத்தேவைக்காகவும் அபகரிக்கப்பட்டுள்ளன.

2011ஆம் ஆண்டின் இறுதி நிலைவரப்படி 2822 குடும்பங்களைச் சேர்ந்த 8477 சிங்களவர்கள் வெலிஓயாவில் குடியேற்றப்பட்டுள்ளதாக அறிய கிடைக்கின்றது. ஆனால் 2012ஆம் ஆண்டின் இறுதியில் 2917 குடும்பங்களைச் சேர்ந்த 9025 அதாவது 95 குடும்பங்கள் அதிகரித்துள்ள அதேவேளை 548 அங்கத்தவர்கள் கூடியுள்ளனர்.

வெலிஓயாவைத் தவிர ஏனைய பிரதேச செயலர் பிரிவுகளிலும் கூட மொத்தமாக 217 குடும்பங்களைச் சேர்ந்த 503 சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2011ஆம் ஆண்டில் 8477ஆக இருந்த சிங்களவர்களின் எண்ணிக்கை 2012ஆம் ஆண்டில் 9025ஆக உயர்ந்துள்ளமையும் அவர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் குடியேற்றப்பட்டுள்ளமையும் இங்கு கவனிக்கத்தக்கது.

தமிழ் மக்களின் எண்ணிக்கையில் இயல்பாகவே இடம்பெற்றிருக்க வேண்டிய அதிகரிப்புக்கூட இடம்பெறவில்லை என்று அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களிலிருந்து தெரியவருகின்றது. இவைகளுடன் இஸ்ரேலின் சமீபத்திய நடவடிக்கையை ஒப்பிட்டுப்பார்க்க வேண்டியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரை தமிழர்களில் ஆண்களின் எண்ணிக்கையைவிட பெண்களின் எண்ணிக்கை 3439 அதிகம். மொத்த பெண்களின் எண்ணிக்கை 58334 என்றும் இவர்களில் 4535 பெண்கள் விதவைகள் என்றும் 2013ஆம் ஆண்டின் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. இது ஏறத்தாழ ஒன்பது விழுக்காடு ஆகும். இந்த விபரமும் சரியானதாகத் தெரியவில்லை. இதுகுறித்தும் ஆராய வேண்டியுள்ளது.

2012ஆம் ஆண்டின் கையேட்டின்படி வெலிஓயா பிரதேச செயலகப்பிரிவின் கிராம சேவகர் பிரிவுகள் முறையே சிங்கள மக்கள்தொகை வருமாறு: (பக்கம்:024)

இல. கிராம அலுவலர் பிரிவு குடும்பங்கள் அங்கத்தவர் ஆண் பெண்

1. நவகஜபுர 113 350 175 –
2. கல்யாணபுர 209 782 391 175
3. எஹெதுகஸ்வெவ 479 1686 812 401
4. எதெவெடுனுவவெவ 343 1117 555 874
5. ஜனகபுர 254 712 350 562
6. கிருபன்வெவ 344 1156 533 362
7. நிக்கவெவ வலது 315 964 520 623
8. நிக்கவெவ இடது 383 1218 543 444
9. கஜபுர 382 492 226 675

மொத்தம் 2822 8477 4105 4116

மேற்கண்ட அட்டவணையின் கூட்டுத்தொகையைப் பார்த்தாலே இதில் உள்ள தவறுகள் திட்டமிட்டே செய்யப்பட்டுள்ளதென்பதைப் புரிந்துகொள்ள முடியும். குடும்பங்களின் எண்ணிக்கையும் அங்கத்தவர்களின் எண்ணிக்கையும் ஒத்துப்போகின்ற அதேவேளை, ஆண் பெண் எண்ணிக்கையில் ஒன்றுகூட பொருந்தி வரவில்லை என்பதை உணர்ந்துகொள்ள முடியும். இதனை வெறுமனே மனிதத்தவறென்று பார்ப்பதற்கில்லை. தமிழர்களின் பிரதேசத்தில் மட்டும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை சிங்களவர்கள் வாழ்கின்ற வெலிஓயாவிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கின்றது என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே இந்த புள்ளிவிபரம் இவ்வாறு தவறாகக் கொடுக்கப்பட்டிருக்குமோ என்றே சிந்திக்க வேண்டியுள்ளது.

அத்துடன் அரசாங்கம் எவ்வளவுபேரைக் குடியேற்ற வேண்டும் அவர்களில் ஆண், பெண் விகிதாசாரம் எப்படி இருக்க வேண்டும் என்றும் நன்கு திட்டமிட்டுச் செயற்படுவதாகவே தெரிகின்றது.

மன்னாரில் முள்ளிக்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடற்படை மற்றும் இராணுவத்தின் தேவைக்காகவும் ஏனைய தேவைகளுக்காகவும் பறித்தெடுக்கப்பட்டுள்ளது. இதில் சிங்களக் குடியேற்றங்களும் நடைபெற்றுவருகின்றன.

1983ஆம் ஆண்டின் பின்னர் வடக்கில் குறிப்பாக வன்னிப்பகுதியில் தடைப்பட்டிருந்த காணி அபகரிப்பும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் 2009ஆம் ஆண்டின் பின்னர் மிகவும் வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. இது குறித்து நாம் சர்வதேசத்திடம் முறையிட்டுள்ளோம். சில கவனயீர்ப்பு போராட்டங்களையும் நடத்தியுள்ளோம். இருந்தபோதிலும் அவை போதுமானவையல்ல. இன்றுள்ள சூழலில் நாம் எம்மால் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றோம். விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி பாரிய ஜனநாயகப்போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது. மக்களைப் போராட்டத்திற்கு அணி திரட்டுவதற்கு முன்னர் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றோம். நாமும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் அரசின் இத்தகைய காணி சுவீகரிப்புகள், காணி கையகப்படுத்தல் செயற்பாடுகளுக்கு எமது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றோம்.

கேள்வி :
இலங்கைப் பிரச்சனைகளை சர்வதேசத்திடம் முறையிட வேண்டாம் என இந்தியா, த.தே.கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகின்றதே! இவ்விடயத்தின் உண்மைத் தன்மை என்ன?

பதில்:
அவ்வாறான எத்தகைய அழுத்தங்களும் இந்தியாவிடமிருந்து எமக்கு வரவில்லை. உள்நாட்டில் எமது பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிட்டாத நிலையிலேயே நாம் சர்வதேசத்திடம் முறையிட வேண்டியேற்பட்டது. ஆகவே, எமது நிலையை உணர்ந்த எவரும் எம்மீது எத்தகைய அழுத்தத்தையும் பிரயோகிக்க முற்படமாட்டார்கள் என்றே நாம் நம்புகின்றோம்.

கேள்வி :
மோடி அரசுடன் த.தே.கூட்டமைப்பின் சந்திப்பு தாமதப்படுவதற்கான காரணம் என்ன? கூட்டமைப்பின் இந்திய விஜயம் எப்போது அமையும்? அதன் போது முக்கியமாக கதைக்கப்படவிருக்கும் விடயங்கள் எவை?

பதில்:
பாரதப்பிரதமர் மோடி அவர்கள் பதவியேற்று சிலமாதங்களே ஆகின்றன. இந்தியாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர வேலைகளிலேயே அவரது முழுக்கவனமும் இப்பொழுது உள்ளது. எமது பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பாக அவர் கவனம் செலுத்தி வருவதாகவே நாம் அறிகிறோம். அவரைச் சந்தித்து எமது நிலைப்பாட்டையும் இலங்கை அரசின் இன்றைய நடவடிக்கைகளையும் தெளிவுபடுத்துவதற்காக நாமே அவரிடம் நேரம் ஒதுக்கித்தருமாறு கேட்டிருந்தோம். எமது வேண்டுகோள் ஏற்கப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் எமக்கு அழைப்பு வரும் என்று காத்திருக்கின்றோம்.

கேள்வி :
இந்தியப் பிரதமர் மற்றும் தமிழக முதல்வரை அவதூறு செய்யும் விதமாக இலங்கை அரசின் பாதுகாப்பு இணையத்தளத்தில் வெளியான கட்டுரை மற்றும் அதன் பின்னால் எழுந்திருக்கும் எதிர்ப்பலைகள் தொடர்பில் உங்களின் கருத்து என்ன?

பதில்:
இந்திய மீனவர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பாக அரசிடம் ஏதாவது திட்டம் இருந்தால் ராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டு நல்லுறவு பாதிக்கப்படாமல் தீர்வு கண்டிருக்க முடியும். அவ்வாறு இடம்பெற்றிருந்தால் இத்தகைய கட்டுரைக்கோ அல்லது அதன் பின்னர் எழுந்துள்ள எதிர்ப்பலைகளுக்கோ இடமிருந்திருக்காது. ஆனால் பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய இலங்கை அரசு அதனைத் தீர்ப்பதற்கு முன்வராமல் தமிழக முதல்வரையும் பாரதப் பிரதமரையும் தனிப்பட்ட முறையில் சிறுமைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது அதிலும் எங்கும் எதிலும் பாதுகாப்புத்தரப்பினரின் பிரசன்னமே நீக்கமற நிறைந்திருக்கும் நிலையில் ஒரு நாட்டின் பொறுப்பு வாய்ந்த பாதுகாப்பு அமைச்சு இத்தகைய ஈனத்தனமான செயலைச் செய்திருப்பது இலங்கையர்கள் அனைவரும் கூனிக்குறுக வேண்டிய அளவிற்கு அவமானத்தின் சின்னமாகவே பார்க்கவேண்டியுள்ளது.

தமிழக முதல்வரின் செயற்பாடுகளைக் கொச்சைப்படுத்தும் அரச இயந்திரம் அவர் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் மதிக்கப்படுகின்ற ஒரு பெண் என்பதையும் மறந்து செயற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள பெண்கள் அமைப்புகளும் இலங்கை அரசின் செயற்பாட்டைக் கண்டித்துள்ளன. தமிழகத்தில் மட்டுமே அதிக கவனத்தைப் பெற்றிருந்த எமது விவகாரம் இப்பொழுது இந்தியா முழுவதும் கவனத்தைப் பெற்றுள்ளது. அத்துடன் இலங்கை அரசின் உண்மையான முகத்தை இந்திய மக்கள் உணர்ந்து கொள்வதற்கும் இலங்கை அரசின் செயற்பாடு வழிசெய்துள்ளது.

கேள்வி :
ஐ.நா. விசாரணைக்குழு தமது விசாரணைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்திருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கும் நிலையில், அதன் விசாரணைகள் பற்றி கூட்டமைப்பு அவதானிக்கின்றதா? ஜனாதிபதியால் அமைக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டு நிபுணர்கள் அடங்கிய விசாரணைக்குழு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் புலம்பெயர் உறவுகளும் மேற்கொண்ட தீவிர முயற்சிகளின் பயனாகவே ஐ.நா மனிதவுரிமை ஆணையம் சர்வதேச விசாரணைக்குழுவை நியமித்துள்ளது. ஆகவே எமது முன்முயற்சியால் நடைபெறுகின்ற விசாரணைகளை நாம் எப்படித் தட்டிக்கழிக்க முடியும்? நாமும் எம்மால் முடிந்த ஆதரவுகளை வழங்கி வருகின்றோம். இதில் அவதானிப்பதைவிட ஒத்துழைப்பு வழங்குவதே சாலச்சிறந்தது. அதுவே எமது மக்களின் அனைத்து இழப்புகளுக்கும் நாம் செய்யும் சிறிய பரிகாரமாக அமையும் என்பதே எமது நிலைப்பாடு.

வெளிநாட்டைச் சேர்ந்த எவரையும் நாட்டிற்குள் அனுமதிக்க முடியாது என்று சொன்ன அரசாங்கம் தானாகவே பல விசாரணைக்குழுக்களை அமைத்து சில முடிவுகளையும் அறிவித்திருந்தது. ஆயினும் அவற்றை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிந்ததும் வெளிப்படையாக சர்வதேச விசாணையை நிராகரித்த அரசு, இப்பொழுது சில வெளிநாட்டு நிபுணர்களை தமது விசாரணைக்குழுவிற்கு ஆலோசகர்களாக நியமித்து அதற்கு சர்வதேச அங்கீகாரம் கொடுக்க முயல்கிறது. இது எந்தளவிற்கு நடுநிலையாக இருக்கும் என்றும் உண்மையை வெளிக்கொணரும் என்றும் தெரியவில்லை. இதன் நம்பகத்தன்மையை சந்தேகிக்க வேண்டியுள்ளது.

இங்கு ஒன்றைச் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். காணாமல் போனோர் தொடர்பாக விசாரிக்கும் ஜனாதிபதியின் ஆணைக்குழுவில் சாட்சியமளித்த சிலர் பாதுகாப்புப் படையின் புலனாய்வுப் பிரிவினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். விசாரணைக்குழு கூட மக்களிடம் தேவையற்ற கேள்விகளைக் கேட்டுள்ளது. விசாரணைகள் நடந்துகொண்டிருக்கும்போதே பயங்கரவாதத்தடுப்புப் புலனாய்வுப்பிரிவினர் மரணச்சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுமாறு மனுதாரர்களை வற்புறுத்தியுள்ள சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இப்பொழுது இந்த ஆணைக்குழுவிற்கு யுத்தக்குற்றங்கள் தொடர்பாகவும் விசாரணை செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன் இதன் கால எல்லையும் நீடிக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பார்க்கும்போது அரசு திட்டமிட்டு காலத்தைக் கடத்தும் நாடகமாகவே இந்த விசாரணைக்குழுவை நியமித்துள்ளதுடன், அதற்கு இப்பொழுது ஆறு பேரைக் கொண்ட நிபுணர் குழுவையும் அமைத்துள்ளது வெளிப்படையாகத் தெரிகின்றது.

கேள்வி :
சாட்சியாளர்கள் அச்சுறுத்தப்படுவதும், அவர்கள் குரல்களை நசுக்குவதிலும் பாதுகாப்பு தரப்பினர் செயற்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. சாட்சியாளர்களின் பாதுகாப்புத் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள்?

பதில்:
இதற்கு சமீபத்திய சம்பவங்களே சாட்சிகளாக அமைகின்றன. ஊடகவியலாளர்கள் மூலம் நாங்கள் தகவல்களைப் பெற்றுக்கொள்வோம் என்று ஐ.நா. தெரிவித்த உடனேயே அரசு வடக்கில் உள்ள ஊடகவியலாளர்களின் குரல் வளையை நசுக்கும் நடவடிக்கையைத் தொடங்கிவிட்டது. சமீபத்தில் மருதாணையில் சர்வதேச ராஜதந்திரிகள் கூடியிருந்த நிலையில் காணாமல் போகச்செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தமது முறைப்பாட்டைத் தெரிவிக்க வருகை தந்தபோது வி~மிகள் உள்ளே புகுந்து அந்த நிகழ்வைத் தடுத்துள்ளனர்.

இதிலிருந்து அரசாங்கம் எந்தளவிற்கு அச்சத்தில் உள்ளது என்பது தெளிவாகிறது. இவ்வாறு குற்றவுணர்வினால் ஏற்பட்டுள்ள அச்சத்தில் உள்ள அரசு எவ்வாறு தன்மீது தானே பக்கச்சார்பற்ற விசாணைகளை முன்னெடுக்கும்? அல்லது தன்மீது, தன் நாட்டில் ஒரு பக்கச்சார்பற்ற விசாரணை நடப்பதற்கு எவ்வாறு உறுதுணையாயிருக்கும்?

இன்று காஸாவில் நடைபெற்ற விடயங்கள் சர்வதேசத்திற்கே தெரியும். இஸ்ரேல் எவ்வாறு நடந்துகொண்டது என்பது சாட்சிகளுடன் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஐ.நா.மனிதவுரிமை ஆணையாளர் இஸ்ரேலின் நடவடிக்கைகள் போர்க்குற்றங்கள் என்று கருதுவதற்குக் காரணங்கள் இருக்கின்றன என்று தனது பார்வையைத் தெளிவாகப் பதிவுசெய்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தல்களின்போது; தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் இன்றைய தலைவரும் அன்றைய செயலாளர் நாயகமுமாகிய சுரேஸ் பிறேமச்சந்திரன் கல்முனையில் பேசுகையில் இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் செயற்படுவதைப்போலவே இலங்கை அரசு வடக்கு-கிழக்கில் செயற்படுகின்றது. ஆகவே இஸ்லாமியர்களும் எம்முடன் இணைந்து அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல்கொடுக்க முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அது எந்தளவிற்கு உண்மை என்பது இந்த அரசாங்கம் முள்ளிவாய்க்காலில் எம்மீது நடத்திய தாக்குதலும் இஸ்ரேல் இன்று பாலஸ்தீனத்தின் மீது மேற்கொண்டிருக்கும் தாக்குதலும் நிரூபித்திருக்கின்றன.

ஐ.நா.வின் பாதுகாப்பில் இருந்தவர்கள்மீதும் பாடசாலை மற்றும் மருத்துவமனைகளின்மீதும் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியுள்ளது என்பதை இலங்கை அரசிற்குச் சார்பான காட்சி ஊடகங்களே செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறான சூழலில், இலங்கையில் நடந்தவற்றை அதே செய்மதியினூடாக சர்வதேசம் செய்திகளைச் சேகரித்திருக்காதா? தான் சேகரித்துள்ள செய்திகளுக்கு சில நேரடி சாட்சிகள் தேவை என்பதற்காக மட்டுமே ஐ.நா. இங்கு விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றது. உள்ளங்கைப் புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை என்பார்கள். அதைப்போன்று எம்மினத்தின்மீது மேற்கொள்ளப்பட்ட கோரத்தாக்குதலுக்கு சர்வதேசத்திடம் ஏராளமான சான்றுகள் உள்ளன. அவற்றிற்கு பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து வாக்குமூலம் பெற்றுக்கொள்வது மட்டுமே அதன் தேவையாக உள்ளது.

கேள்வி :
அண்மையில் இடம்பெற்ற யாழ் ஊடகவியளார்களின் திட்டமிட்ட கைது தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்:
எதைத்தின்றால் பித்தம் தீரும் என்று தமிழில் ஒரு பழமொழி உள்ளது. அரசாங்கம் அந்த நிலையிலேயே தற்போது உள்ளது. அதனால்தான் அருண்டவன் கண்ணிற்கு இருண்டதெல்லாம் பேயாகத் தெரிகின்றது. ஊடகவியலாளர்கள் தமது வான்மை விருத்திக்கான பயிற்சியை மேற்கொள்வதற்காகச் சென்றால்கூட தமக்கு எதிராகச் சாட்சிசொல்லப்போகின்றார்கள் என்று அரசும் பாதுகாப்புத் தரப்பினரும் அஞ்சுகின்றனர். அதனாலேயே ஊடகவியலாளர்கள் தமது பயிற்சியை மேற்கொள்வதிலிருந்து தடைசெய்யும் நோக்கில் அவர்கள்மீது சேறுப+சுகின்ற வகையில் அவர்களது நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் நோக்குடன் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கவைக்க முயன்றுள்ளனர்.

ஊடகவியலாளர்களின் சாதுர்யமும் சமயோசிதமும் அவர்களின் அறிவுக்கூர்மையும் பாதுகாப்புத் தரப்பினரின் முகமூடியைக் கிழித்தெறிந்ததுடன் அவர்களின் மிலேச்சத்தனமான செயற்பாட்டையும் அம்பலப்படுத்தியது.
இந்நாட்டின் ஒழுக்கசீலர்கள் என்று வர்ணிக்கப்படும் பாதுகாப்புத் தரப்பினரிடம் இத்தகைய போதைப்பொருட்கள் தடையின்றி உலாவருவது கவலை தருகின்றது. நாம் இராணுவம் எமது மண்ணைவிட்டு வெளியேற வேண்டும் கேட்பதற்கு இதுவும் ஒருகாரணம். அண்மையில் போதைப்பொருளுடன் பிடிபட்டவர்களில் பலர் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தற்பொழுது ஊடகவியலாளர்கள் பாதுகாப்புப் படையினர்மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். வழக்கில் மேலும் உண்மைகள் வெளிவரும் என்று நம்புவோம்.

கேள்வி :
ஈ.பி.ஆர்.எல்.எப். இன் 35ஆவது வருடாந்த மாநாட்டில் த.தே.கூட்டமைப்பை பதிவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அதனை செயற்படுத்துவது தொடர்பில் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றனவா? இது எப்போது சாத்தியமாகும்?

பதில்:
கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும். அதனை பலம் வாய்ந்த சட்டவலுமிக்க ஒரு கட்சியாக, மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் அமைப்பாக மக்களை அணிதிரட்டும் வல்லமையுடைய கொள்கைப்பிடிப்புடைய கட்சியாக ஒரு அரசாங்கத்தை நடத்துவதற்குத் தேவையான அனைத்துக் கட்டுமானங்களையும் உள்ளடக்கிய பிரிவுகளைக் கொண்ட ஒரு குடை அமைப்பாக மிளிரச்செய்ய வேண்டும் என்பதே ஒடுக்குமுறைக்குட்படுத்தப்பட்டுள்ள தமிழ் மக்கள் அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

இதனையே நாங்களும் எமது 35ஆவது சிறப்பு மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றினோம். இதற்கு முன் நடைபெற்ற அனைத்து வருடாந்த கூட்டங்களிலும் நாம் இதனைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளோம். அதன் விளைவாகவே இப்பொழுது கூட்டமைப்பைப் பதிவு செய்வதற்கான பணிகளை மேற்கொள்வதற்கு ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன் பணிகள் மந்தகதியில் நடைபெற்றுவருவதாக பாராளுமன்றகுழு தலைவரே ஒப்புக்கொண்டுள்ளார். நாம் இதனை முனைப்போடும் அக்கறையோடும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றே கோருகின்றோம்.

கேள்வி :
வட மாகாண சபையில் கூட்டமைப்பு ஆட்சியமைத்து 10 மாதங்கள் ஆகின்றன. மக்கள் செயற்றிட்டங்கள் எந்தளவு தூரத்திற்கு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஆளுனரின் மீள் நியமனம் குறித்த உங்கள் பார்வை என்ன?

பதில்:
நாளொரு வழக்கும் பொழுதொரு அறிக்கையுமாக ஆளுநருடனும் அதிகாரிகளுடனும் மல்லுக்கட்ட வேண்டிய நிலையிலேயே வடக்கு மாகாண சபை உள்ளது. இருப்பினும் சபை தன்னால் முடிந்த அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்றது. மக்கள் பிரதிநிதியான முதலமைச்சர்; தமது சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு பிரதம செயலாளர்மூலம் செயல்வடிவம் கொடுப்பதற்குக்கூட அதிகாரமற்ற நிலையில் உள்ளார். இதில் மாகாணசபை அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளவில்லை என்று மத்திய அரசு குற்றம் சுமத்துகின்றது.

மாகாண முதலமைச்சரின் ஆலோசனையுடனேயே செயலாளர் மற்றும் ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று பதின்மூன்றாவது திருத்தம் கூறுகின்றது. ஆனால் இங்கு அந்த நடைமுறை குப்பையில் போடப்பட்டுள்ளது.
சிவிலியன் ஒருவரையே ஆளுநராக நியமிக்க வேண்டும் என்று முதலமைச்சரால் விடுக்கப்பட்ட கோரிக்கை ஜனாதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அடுத்தமுறை ஆளுநரை நியமிக்கும்போது அவ்வாறு செய்வதாக வாக்குறுதி அளித்த ஜனாதிபதி தனது வாக்குறுதியை வழக்கம்போலவே காற்றில் பறக்கவிட்டுள்ளார்.

இந்த ஆளுநரை நாம் முன்பும் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்பொழுதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் மத்திய அரசு தாம் நினைத்ததைத்தான் செய்வோம், வடமாகாணசபை தான் சொல்வதைக் கேட்டுத்தான் நடக்க வேண்டும் என்ற தோரணையில் செயற்படுகின்றது. ஆக வடமாகாணசபையின் நாளாந்த நடவடிக்கைகளே பெரும் போராட்டமாகவே இருக்கின்றன.

நன்றி,

-தமிழ்தந்தி-

Tags: , ,

Leave a Reply