மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தீர்மானங்களை துஸ்பிரயோகம் செய்யும் பிரதேசசெயலாளர்! ஆனந்தன் எம்.பி கண்டனம்!
வவுனியா, நெடுங்கேணி, சின்னடம்பன் பகுதியில் உள்ள மக்களுக்கு சொந்தமான காணிகளில், வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் உள்ள மக்களை குடியமர்த்த நெடுங்கேணி பிரதேச செயலாளர் மேற்கொண்ட நடவடிக்கையை காணி உரிமையாளர்கள் இன்றைய தினம் (15.08.2014) தடுத்து நிறுத்தியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்திஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் ம.தியாகராசா, நெடுங்கேணி பிரதேசசபைத் தலைவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சிவசக்தி ஆனந்தன் எம்.பி தகவல் தருகையில்,
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில், இராசபுரம் சின்னடம்பன் கிராம மக்களுக்குச்சொந்தமான காணிகளை தவிர்த்து பூந்தோட்டம் மக்களை அரச காணியில் குடியேற்றுவது என்று எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு மாறாக, பிரதேசசெயலாளரும், அரச அதிபரும் தன்னிச்சையாக இன்று இந்த செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பகுதியில் போதியளவு அரச காணிகள் இருக்கின்ற நிலையில், பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிக்க முயற்சித்தமையினாலேயே இங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. பூந்தோட்டப்பகுதி மக்களை, இப்பகுதியிலுள்ள மக்களுக்கு சொந்தமான காணிகளை தவிர்த்து அரச காணிகளில் குடியமர்த்துவதில் எமக்கும் இங்குள்ள மக்களுக்கும் எவ்வித ஆட்சேபனையும் இல்லை. முழுமனதுடன் அவர்களை வரவேற்கின்றோம்.
இந்தச்சம்பவம் தொடர்பில் வடமாகாண முதலமைச்சருக்கும், அமைச்சர் றிசாட் பதியுதினதும் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தப்போக்கானது மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு முடிவுகளை அதிகார துஸ்பிரயோகம் செய்தமைக்கு சான்றாகும். இரு இணைத்தலைவர்களும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
Feedback
வவுனியா, பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் உள்ள 135 குடும்பங்களையும் நெடுங்கேணி, இராசபுரம் பகுதியில் மீளக்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னர் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இராசபுரம் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட பல காணிகள் அப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு சொந்தமானவையாகும். இதனால் காணி ஆவணங்களைக் காட்டி அவ்விடத்தில் மீள்குடியேற்றம் என்னும் போர்வையில் தமது நிலம் அபகரிக்கப்படுவதாக மக்கள் எதிர்ப்புத்தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த 4ஆம் திகதி வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட்பதியூதின் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்ற போது, இவ்விடயம் தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சபையின் கவனத்திற்கு தெரியப்படுத்தியிருந்தார்.
இதன்போது, இராசபுரம் கிராமத்தில் மீள்குடியேற்றத்தெரிவு செய்யப்பட்ட காணிகள் பொதுமக்களுடையது என்பது வெளிப்படுத்தப்பட்டமையால் அவற்றை தவிர்த்து, அரச காணிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலாளருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே, நெடுங்கேணி, சின்னடம்பன் பகுதியில் உள்ள 10 குடும்பங்களுக்கு சொந்தமான 25 ஏக்கர் காணிகளில் பூந்தோட்ட நலன்புரி நிலைய மக்களை குடியமர்த்தப்போவதாக தெரிவித்து இன்றைய தினம் (15.08.2014) பிரதேச செயலாளரினால் காணி துப்பரவு செய்வதற்கு என புல்டோசர்கள் இரண்டு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
இவ்விரு புல்டோசர்களும் மக்களின் காணிகளை துப்பரவு செய்தமையால் ஆத்திரமடைந்த காணி உரிமையாளர்கள் புல்டோசரை சுற்றி வளைத்து தமது காணிகளை விட்டு வெளியேறுமாறு தெரிவித்தனர். மக்களுக்கும் பிரதேச செயலக அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறினையடுத்து காணி துப்பரவு செய்யும் பணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த காணிகளில் மக்கள் முன்னர் குடியிருந்ததுடன் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்திருந்தார்கள். இக்காணிகளில் மக்களின் பயன் தரும் மரங்கள், கிணறுகள் என்பனவும் காணப்படுவதுடன் காணி உரிமையாளர்களிடம் சுவர்ணபூமி உறுதி, காணி பொமிற் என்பனவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
















