உலகின் மிகவும் மோசமான சிறைச்சாலைகளில் ஒன்றாக கருதப்படும் குவந்தனாமோ சிறைச்சாலையின் கைதிகளுக்கு நிகராக அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர்கள் நடத்தப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கையர்கள் உள்ளிட்ட பல நாடுகளின் புகலிடக் கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவினவரின் பரிந்துரைகளுக்கு அமைய நான்கு புகலிடக் கோரிக்கையாளர்களில் ஒருவர் கால வரையறையின்றி முகமாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர்களை நடாத்தும் விதம் குறித்து ஏற்கனவே ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில், இந்த புதிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மெல்பர்ன் மற்றும் சிட்னி ஆகிய நகரங்களில் 44 புகலிடக் கோரிக்கையாளர்கள் எவ்வித குற்றச்சாட்டுக்களுக்கும் சுமத்தாது கடந்த ஐந்து ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தடுத்து வைக்கப்பட்டமைக்கான காரணங்களை அறிந்துகொள்ள இதுவரையில் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
அவுஸ்திரேலிய அதிகாரிகளின் நடவடிக்கைகளினால் புகலிடக் கோரிக்கையாளர்கள் பாரியளவில் மன உலைச்சல்களுக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புகலிடக் கோரிக்கையாளர்கள் கால வரையறையின்றி தடுத்து வைக்கப்படும் நடவடிக்கையானது ஐக்கிய நாடுகள் சர்வதேச பிரகடனங்களை மீறும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளானது மனிதாபிமானற்ற வகையில் அமைந்துள்ளதாக சிட்னி பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் பென் சாவுல் தெரிவித்துள்ளார்.
எவ்வித குற்றச்சாட்டுக்களையும் சுமத்தாது புகலிடக் கோரிக்கையாளர்கள் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்படுவது மனிதாபிமானமற்ற குரூர செயலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கால வரையறையின்றி புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும், இவ்வாறான முகம்கள் குவந்தனாமோ சிறைக்கு நிகரானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
44 புகலிடக் கோரிக்கையாளர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக கால வரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் ஒப்புக்கொண்டுள்ளார்.
புகலிடக்கோரிக்கையாளர்களின் உளவியல் சுகாதாரத்தை மேம்படுத்த தகுதியான மருத்துவர்களின் ஊடாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
















