யானைகளின் தொல்லைகளிலிருந்து தம்மை விடுவிக்குமாறு, வடகாடு மக்கள் ஆனந்தன் எம்.பியிடம் கோரிக்கை

chettikulam-peoplesசெட்டிக்குளம் பிரதேசசெயலக பிரிவுக்குட்பட்ட வடகாடு கிராம மக்கள், மாலை மற்றும் இரவு வேளைகளில் தமது கிராமத்துக்குள் புகுந்து தமது இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் யானைகளின் தொல்லைகளிலிருந்து தம்மை பாதுகாக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 23.08.2014 அன்று வடகாடு கிராமத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே, அக்கிராம மக்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். இச்சந்திப்பில் வடகாடு கிராம மக்கள் மேலும் தெரிவித்தவையாவது,

1977ம் ஆண்டு தென் இலங்கையில் கட்டவிழ்த்து விடப்பட்ட இன வன்முறைத்தாக்குதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த தமிழ் மக்களில் 125 குடும்பங்கள் தாம் வடகாட்டில் குடியேறியதாகவும், வடபகுதியில் நடைபெற்ற யுத்தம் காரணமாக 1990ம் ஆண்டு மீண்டும் இடம்பெயர்ந்து வன்னி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வசித்து 2009ம் ஆண்டுக்குப்பின்னர் மீளக்குடியமர்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

தற்சமயம் தினக்கூலிக்கு வேலை செய்து வரும் தமக்கு, தமது கிராமத்தில் அண்மையில் புனரமைக்கப்பட்டுள்ள காயாகுளத்துக்கு கீழுள்ள காடுகளை துப்பரவு செய்து நிலங்களை பகிர்ந்தளித்து தந்தால், அக்குளத்து நீரைக்கொண்டு காலபோக பயிர்ச்செய்கைகளில் ஈடுபட பெரிதும் உதவியாக அமையும் எனவும் தெரிவித்ததோடு, தமது கிராமம் காடுகளால் சூழப்பட்டுள்ளதால், மாலை வேளையானதும் யானைகள் கிராமத்துக்குள் புகுந்து தமது உயிர்ப்பாதுகாப்புக்கு அச்சுறுத்தலும், பயிர்களுக்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.

எனவே யானைகளின் அச்சுறுத்தல்களிலிருந்து விடுபட்டு தாம் பாதுகாப்பாக வசிக்க தமது கிராமத்துக்கு மின்சார வசதியை ஏற்படுத்தி தருவதோடு, கிராமத்தின் உள்ளக வீதிகளை புனரமைத்து தருமாறும் வலியுறுத்தினர்.

மேலும் தமது கிராமத்திலிருந்து பூவரசங்குளம் மகாவித்தியாலயத்துக்கு கல்வி கற்க செல்லும் மாணவர்களை மன்னார் – வவுனியா போக்குவரத்து பாதையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச்சபை வண்டிகளும், தனியார் போக்குவரத்துச்சபை வண்டிகளும் ஏற்றாமல் சென்று விடுவதால், மாணவர்கள் பாடசாலை செல்லாமல் வீடுகளுக்கு திரும்பி வந்து விடும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாகவும்,

தமது கிராமத்துக்கென்று போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படாமையினால் டிப்பர் வாகனத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணை ஏற்றிச்செல்லும் அவல நிலை ஏற்பட்டு டிப்பர் வாகனத்துக்குள் குழந்தை பேறு சம்பவித்ததாகவும், போக்குவரத்து சபைகளின் மனிதாபிமானமற்ற இத்தகைய நடவடிக்கைகளினால் மாணவர்களின் கல்வி மற்றும் மருத்துவ தேவைகள் பாதிக்கப்படுவதாகவும், தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

செட்டிக்குளம் பிரதேச செயலாளருடனும், தொடர்புடைய அதிகாரிகளுடனும் பேசி மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுத்தருவதாக சிவசக்தி ஆனந்தன் எம்.பி கூறியுள்ளார். குறித்த மக்கள் சந்திப்பில் செட்டிக்குளம் பிரதேசசபையின் உபதவிசாளர் சந்திரமோகனும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் லண்டன் கிளை உறுப்பினர் மனோகர் பிரபும் கலந்து கொண்டனர்.

கொக்கச்சான்குளம் தமிழ் கிராமத்தை கலாபோபஸ்வௌ எனப்பெயர் மாற்றம் செய்து, அங்கு சட்ட விரோதமாக குடியேற்றியுள்ள சிங்கள மக்களை யானைகளின் தொல்லைகளிலிருந்து பாதுகாப்பதற்காக 26.7 மில்லியன் ரூபா பணத்தை மின்சார வேலி அமைக்க அரசு ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply