திருகோணமலை நகரசபை மண்டபத்தில் கடந்த 26.01.2014 அன்று கூடிய, இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் மத்தியகுழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் “இவை தான்” என்று சொல்லி ஊடகங்களில் “ஒரு தொகை” செய்திகள் வெளியாகியிருந்தன.
உண்மையில் “அவை மட்டும் தானா” கூடிப்பேசி ஆராயப்பட்டன? எங்கும், எதிலும், எந்நேரமும், எல்லாவற்றிலும், அவர்கள் தமிழ் மக்களுக்காக வெளிப்படையாக இருந்திருக்கிறார்களா? இதயசுத்தியுடன் தம்மை அர்ப்பணிக்கிறார்களா? என்பதற்கு, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா முன்வைத்த தீர்மானம், இதோ ஒரு முக்கிய சாட்சி!
“நாங்கள் (இலங்கை தமிழரசு கட்சி) மாவட்டந்தோறும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்று சொல்லி அலுவலகங்கள் திறக்கேல்ல. ஆனால், மற்ற கட்சிகள் (கூட்டமைப்புக்குள் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய கட்சிகள்) அலுவலகங்கள் திறந்திருக்கு.
மட்டக்களப்பில ஜெனா.கருணாகரம் (ரெலோ) தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்று சொல்லி இளைஞர் அணியை கட்டமைக்கிறார். முல்லைத்தீவில (ஈ.பி.ஆர்.எல்.எப்) தமிழ் தேசியக்கூட்டமைப்பு அலுவலகம் திறக்கப்பட்டிருக்கு.
இந்த செயல்பாடுகள நாங்கள் அனுமதிக்கக்கூடாது. இதெல்லாமே எங்கட கட்சிய (இலங்கை தமிழரசுக்கட்சியை) பலவீனப்படுத்துற நடவடிக்கைகள். இப்படியே விட்டால் நாங்க காணாமல் போயிருவம். அவையள் எங்களுக்கு கீழ இருந்து தான் செயல்பட வேண்டும். எங்கள கேட்காமல் இப்படி அப்படி செயல்படுறத எல்லாம் உடனடியா நிறுத்தச்சொல்லி கட்டாயம் சொல்ல வேணும்.” என்று தனது தீர்மானத்தை முன்வைத்தார்.
அதற்கு சம்பந்தன் அளித்த பதில் என்னவென்று தெரியுமா? “தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்று சொல்லுறது, அது அப்படியே தான் இருக்கும். நீங்கள் வேண்டுமானால் உங்கட உங்கட கட்சிய பலப்படுத்தி கொள்ளலாம். அதுக்கு தடையில்ல. அது பற்றி ஆட்சேபனையும் இல்ல.” என்று தெரிவித்தார்.
அதாவது, (One Party, One Vision, One Voice, One Principal, One Nation) என்று ஆகாமல் இருப்பதில் தனக்கு ஆட்சேபனை இல்லையாம். என்று சம்பந்தன் கூறுகின்றார்.)
வடபிராந்திய புலனாய்வு ஊடகவியலாளர்,
-கழுகுகண்-
















