ஆடத்தெரியாதவன் மேடை கோணல் எனச் சொல்லுவது போல் வடமாகாண சபையினரும் மக்களுக்கான பணியை முன்னெடுத்துச் செல்லத் தெரியாது அரசாங்கம் முட்டுக்கட்டையாக உள்ளதாக குற்றம் சாட்டி வருகின்றனர். தங்களின் சொகுசு வாழ்க்கைக்காக அரசாங்க அமைச்சர்களுடன் பேச்சுக்களை நடத்தத் தெரிந்த இவர்களுக்கு மக்களின் பிரச்சினை தொடர்பாக பேசத் தெரியாதா என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேட்டுள்ளார்.
நாடு முழுவதும் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட வாழ்வின் எழுச்சித்திட்டத்தின் வாழ்வாதாரக் கடன் வழங்கும் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள யாழ்.நகர் மேற்கு சமுர்த்தி வங்கியிலும் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி மற்றும் பாரம்பரிய கைத்தொழில் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடனுதவிகளை வழங்கி இத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர். இங்கு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
இந்த அரசாங்கத்தில் உங்கள் சார்பாக நான் அமைச்சராக இருக்கின்றேன். அரசாங்கம் தமிழ் மக்களின் நலன்களுக்கு புறம்பாகச் செயற்படாது என நான் நம்புகின்றேன். அவ்வாறு தவறாக நடக்குமாக இருந்தால் நிச்சயமாக அதை என்னால் சுட்டிக்காட்டித் திருத்திக் கொள்ளமுடியும்.
திவிநெகும, சான அருண என்னும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் பெயர்களை உதவும் கரங்கள் என மாற்றவேண்டும் என ஜனாதிபதியிடமும் பஷில் ராஜபக் ஷவிடமும் தெரிவித்தேன். அதன் பிரகாரம் இந்தப் பெயர் மாற்றம் ஒரு இரவில் நடைபெற்றது. மாற்றங்களை எங்களாலும் செய்யமுடியும். இது இணக்க அரசியல் மூலமே சாத்தியமாயிற்று.
கொழும்பிலிருந்து ஹெலிகொப்டரில் வருவதால் வடக்கில் அபிவிருத்திகளைச் செய்யமுடியாது என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அச்சுவேலி கைத்தொழில்பேட்டைக்கு அமைச்சர் பஷில் வந்தபோது வடமாகாண முதலமைச்சரும் கலந்து கொண்டார். அப்போது அவர்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம் என்றார். அதன்பிறகு ஹெலிகொப்டரில் வருபவர்களால் வடக்கை அபிவிருத்தி செய்யமுடியாது எனத் தெரிவித்தார். இவ்வாறு முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை முதலமைச்சர் வெளியிட்டு வருகின்றார்.
எனக்கு ஞாபகம் இருக்கிறது வடக்கு மாகாணத்தில் இவர்கள் பதவி எடுத்தவுடன் அமைச்சர்களிடம், எங்களுக்கு கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் போய் வருவதற்கு இலவச விமான சேவையை ஏற்படுத்தித் தாருங்கள் எனக் கேட்டனர். தங்களுடைய தேவைகளுக்காக இலவச விமான சேவையை கேட்ட இவர்கள் மக்களுடைய தேவைகள் என்றால் அரசாங்கத்துடன் அணுகும் விதம் ஒன்றாகவும் தங்களுடைய சொந்தத்தேவை என்றால் அணுகும் விதம் வேறொன்றாகவும் இருக்கின்றது.
கடந்த 1977ஆம் ஆண்டும் இதேபோல் தான் ஒரு சம்பவம் நடைபெற்றது. அப்போது தமிழீழம் கேட்டவர்கள் பெற்றுக்கொண்டது ஜப்பான் ஜீப்பும் இந்தியாவின் தமிழ்நாட்டில் தனி வீடும் தான். தமிழ் மக்களுக்காக இவர்கள் எதையும் கேட்கவில்லை. இதுதான் இவர்களின் வரலாறு. இதை மக்கள் சரியாகப் புரிந்த கொள்ளவேண்டும்.
அரசாங்கம் தமிழ் மக்களுடைய பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தயாராக இருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினையையும் வாழ்வாதாரப் பிரச்சினையையும் தீர்த்து வைப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. மக்களின் நாளாந்த பிரச்சினைகளை எடுத்துச் செல்லும்போது அதனை உடனடியாக அரசாங்கம் தீர்த்துவைக்கின்றது. அதனை நாங்கள் இங்கு தொடர்ந்து செய்து வருகின்றோம்.
இன்றைய திட்டமான வாழ்வின் எழுச்சிக் கடன்திட்ட சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு வந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதனை எதிர்த்தார்கள். அப்போது இது தமிழர்களுக்குத் தேவையில்லை என்று அரசாங்கம் தட்டிக்கழிக்கவில்லை. பெருந்தொகைப் பணம் வடக்கிற்கு போகிறது என வழக்கு போட்டு தென்னிலங்கை அரசியல்வாதிகள் தடுத்திருக்கலாம். ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி எங்களுடைய இணக்க அரசியல் மூலமும் அரசாங்கத்தின் கொள்கையின் நிமித்தமும் இத்திட்டம் இன்று மக்களிடம் வந்தடைந்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் ஒரு இலட்சத்து 43 ஆயிரத்து 500 குடும்பங்கள் இதனால் பயனடைகின்றனர். யாழ்.மாவட்டத்தில் 85 ஆயிரம் குடும்பமும் கிளிநொச்சியில் 18 ஆயிரம் குடும்பமும் முல்லைத்தீவில் 12 ஆயிரம் குடும்பமும் மன்னாரில் 16 ஆயிரம் குடும்பமும் வவுனியாவில் 16 ஆயிரத்து 500 குடும்பமும் இத்திட்டத்தின் மூலம் பயடைகின்றன.
வடமாகாண ஆளுநர் தொடர்பாக எதிர்ப்பு அரசியல் செய்பவர்கள் விஷமத்தனமான பிரச்சாரங்களைச் செய்து வருகின்றனர். வடமாகாணத்தின் முன்னேற்றத்திற்கு ஆளுநர் தடையாக இருக்கிறார் என பொய்யுரைக்கிறார்கள். தங்களுடைய தேவைக்கு சொகுசு வாகனங்களை அவரிடம் பேசி எடுத்துக்கொள்ளமுடியும் என்றால் ஏன் இவர்களால் மக்கள் அபிவிருத்தியை ஆளுநருடன் இணைந்து முன்னெடுத்துச் செல்லமுடியாது. வடக்கின் அபிவிருத்திக்கு ஆளுநர் தடையாக இருக்கின்றார் என்றால் வெளிப்படையான விவாதத்திற்கு வாருங்கள் என நான் கூட்டமைப்பினரிடம் கேட்டிருந்தேன். இது தொடர்பாக ஆளுநருடன் நேரில் கதைத்து தடைகளை அகற்றுவோம் வாருங்கள் என அழைப்பு விடுத்தேன். அவ்வாறு முடியாவிட்டால் ஜனாதிபதியிடம் சென்று வடக்கின் அபிவிருத்திக்கு தடையாக உள்ளவற்றை எடுத்துகூறி தீர்வுகாணுவோம் வாருங்கள் என அழைத்தேன். ஆனால் அவர்கள் எதற்கும் இணங்கி வரவில்லை.
ஆடத் தெரியாதவன் மேடை கோணல் என்பதுபோல் வடக்கு மாகாண சபையை நடத்திச்செல்லத் தெரியாது கூட்டமைப்பினர் ஏனையவர்களில் குற்றங்களைச் சுமத்தி தப்பித்துக்கொள்கிறார்கள். வைக்கோலுக்கு காவல் இருக்கும் நாயைப் போன்றே இவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு மக்கள் பணியில் அக்கறையில்லை. தங்களின் சொகுசு வாழ்க்கையை வலுப்படுத்திக் கொள்ளவே அவர்கள் அக்கறை காட்டி வருகின்றார்கள் என்றார்
















