தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்று சர்வதேச விவகாரமாக உருவெடுத்துள்ளது. எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேச சமுகம் கவனம் செலுத்துகிறது என்றால், அதற்கெல்லாம் பல ஆயிரம் போராளிகள், பொதுமக்களின் உயிர்த்தியாகங்களே காரணமாகும் என்று கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு செல்வபுரத்தில் கடந்த 08.09.2014 அன்று நடைபெற்ற வலி சுமந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்குதல் மற்றும் முன்னாள் போராளி நிமாலின் “வலியின் வரிகள்” காணொளிப்பேழை வெளியீடு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கையிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் பார்க்க முல்லைத்தீவு மாவட்டம் போரினாலும் சுனாமியினாலும் முழுமையாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாகும். இந்த மாவட்ட மக்களுக்கு பல்வேறுபட்ட தேவைகள் இருக்கின்றன. இந்த தேவைகளை அரச, அரச சார்பற்ற நிறுவனங்களும், வடமாகாணசபை ஊடாகவும், நாமும் இயன்றவரை பூர்த்தி செய்ய பலவித முயற்சிகளை எடுத்தாலும், மக்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலையே காணப்படுகின்றது.
போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உண்மையான வாழ்வாதாரங்கள் ஏற்படுத்திக்கொடுக்கப்படவில்லை. போரால் ஏற்பட்ட பில்லியன் கணக்கான சொத்தழிவுகளுக்கான நஸ்ட ஈடுகளை அரசு இன்றுவரை வழங்கவில்லை. மறுவாழ்வுக்கான உதவிகள், சமுக பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்களை செய்யவில்லை என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பினராகிய எங்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஆயினும் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள், நலன் விரும்பிகளின் நிதிப்பங்களிப்பினூடாக குறிப்பிடத்தக்களவு மனிதாபிமான அவசர உதவிகளை நாம் செய்திருக்கின்றோம். செய்து கொண்டிருக்கின்றோம்.
போரால் ஏற்பட்ட பாதிப்புகள், மன வலிகளிலிருந்து எமது மக்கள் மீண்டெழுந்து வர வேண்டும். இன்றுள்ள சுமைகளை நாளைய சமுதாயமும் சுமப்பதற்கு வழி விட்டுச்செல்லக்கூடாது என்ற அடிப்படையிலேயே எமது சக்திக்குட்பட்ட அனைத்து வளங்களையும் கொண்டு அவசர அவசிய உதவிகளை அக்கறையுடனும், நேசிப்புடனும் செய்து வருகிறோம்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்று சர்வதேச பிரச்சினையாக உருவெடுத்து சர்வதேச சமுகம் எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துகிறது என்றால், இந்த மண்ணுக்குரிய மக்கள் நாம், தலை நிமிர்ந்து சுயகௌரவமாக வாழ வேண்டும். சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு உயிர் நீத்த பல ஆயிரம் போராளிகள், பொதுமக்களின் உயிர்த்தியாகங்களே காரணமாகும். நிச்சயம் இந்த போராளிகள் உறவுகளின் தியாகங்கள் வீண் போகாது. நியாயமான தீர்வு ஒன்றை பெறுவதற்கான எமது பணிகள் தொடரும்.
கடந்த காலத்தில் இந்த மண்ணில் அளப்பரிய தியாகங்களை செய்து, போராடி மடிந்தவர்கள், உயிர்த்தியாகங்களை செய்தவர்கள் தமக்குப்பின்னர் தமிழ் மக்களுக்கு உருப்படியாக எதை விட்டுச்சென்றுள்ளார்கள்? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
புலிகள் அமைப்பினர் மக்களுக்கு எதையும் விட்டுச்செல்லவில்லை என்று கூறுபவர்களுக்கு ஒரு சேதியை முல்லை மண்ணில் நின்று கொண்டு சொல்ல விரும்புகின்றேன்.
இப்படி கேள்வி எழுப்புவதில் எந்த நியாயமும் இல்லை. விடுதலைப்புலிகள் அமைப்பினர் தமக்கு பின்னர் மாபெரும் சக்தியாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு எனும் மக்கள் இயக்கத்தை விட்டுச்சென்றுள்ளார்கள். இந்த மக்கள் இயக்கத்தை கட்டமைத்து எமது மக்களுக்கு காத்திரமான அரசியல் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதை விடுத்து விட்டு, அவர்களை விமர்சித்துக்கொண்டிருப்பது ஏற்புடையதல்ல. ஐக்கிய நாடுகள் சபையில் மூன்று தடவைகள் சிறீலங்கா அரசுக்கு எதிராக, இந்த அரசை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றால் இவையெல்லாம் சாதாரண விடயங்களல்ல.
சர்வதேச நெருக்கடிகள் அழுத்தங்களுக்குள் சிறீலங்கா அரசு இன்று சிக்கி தவிக்கிறது என்றால், அனைத்து இயக்கங்களினதும் பல ஆயிரம் போராளிகள் பொதுமக்களின் உயிர்த்தியாகங்களை யாரும் அவ்வளவு இலகுவில் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
















