கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளின் மனைவியரிடம் பாலியல் இலஞ்சம் கோரும் பொலிஸார்!

lk-policeகிளிநொச்சியில் முன்னாள் போராளிகளின் குடும்பங்கள் மீது கடத்தல், கொள்ளை, களவு, போதைப்பொருள்கள் விற்பனை என்று பல்வேறு போலிக்குற்றச்சாட்டுகளை சுமத்தி அக்குடும்பங்களிடம் பெருந்தொகை கப்பம் பெற முயற்சிப்பதுடன், தமது பாலியல் இச்சைக்கும் உடன்படுமாறு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் வற்புறுத்தி வருகின்றனர். பொலிஸாரின் இத்தகைய அராஜகத்தை எதிர்க்கும் போராளிகளின் மனைவியர் மீது விபச்சார வழக்கு பதிவு செய்து அவர்களை சிறையில் அடைத்து விடுவோம் எனவும் மிரட்டி வருகின்றனர்.

கிளிநொச்சியில் நாளாந்தம் எட்டு பத்து சம்பவங்கள் இவ்வாறு முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு எதிராக, சமுக நீதிக்கு விரோதமாக நடைபெற்றுக்கொண்டிருந்தாலும், கணவர் கைது செய்யப்பட்ட பின்னர் தனித்து வாழ்தல், பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு என்று பல்வேறு அபாயகரமான சூழல்களினால் அத்தகைய சம்பவங்களை வெளிப்படுத்துவதில் அக்குடும்பங்களுக்கு பல்வேறு பாதுகாப்பு பிரச்சினைகளும், உளவியல் பாதிப்புகளும் உள்ளன.

நீதிக்கு புறம்பாக கைது செய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளியினதும், அவரது குடும்பத்தினரதும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, முழுமையாக செய்தியை வெளியிட முடியவில்லை. கடந்த வாரம் நடைபெற்ற இந்தச்சம்பவத்தை கொண்டு அங்கு நடைபெற்றுவரும் ஏனைய சம்பவங்களின் உண்மைத்தன்மையை வாசகர்கள் ஊகித்து அறிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் செய்தியறிக்கை இடுகின்றோம்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர், தனது நெஞ்சுப்பகுதியில் எறிகணைச்சிதறலின் பாகத்தையும், அதன் தாக்கத்தின் வலியையும் தாங்கிக்கொண்டு கடுமையான வேலைகளை செய்ய முடியாததன் காரணமாக, தனது குடும்பத்தினரிடமிருந்த நகைகளை அடைமானம் வைத்தும், தெரிந்தவர்களிடம் கடன்பட்டும் முச்சக்கரவண்டி ஒன்றை (ஓட்டோ) லீசிங் அடிப்படையில் கொள்வனவு செய்து தொழில் நடத்தி வந்துள்ளார்.

கடந்தவாரமும் அவர் வழமைபோலவே Auto Park இல் ஓட்டோவை நிறுத்திவிட்டு பயணிகள் சேவைக்காக காத்திருந்துள்ளார். பயணிகள் மூவர், “பரந்தன் வரை போக வேண்டும். தமக்கு ஓட்டோ சேவையை வழங்க முடியுமா?” என்று கேட்டதும், அவரும் தன்னுடைய குடும்ப வருமானத்தொழில் என்பதால் எவ்வித மறுப்புமின்றி அவர்களை தனது ஓட்டோவில் பரந்தன் வரை ஏற்றிச்சென்று விட்டு, தனது சேவைக்கான பணத்தினையும் பெற்றுக்கொண்டு திரும்பி விட்டார்.

ஆனால் குறித்த ஓட்டோ சாரதியை கடத்தல்காரர்களுக்கு உதவியதாக குற்றம் சுமத்தி அன்று மாலையே கைது செய்த குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், அவரை நீதிமன்றத்தில் கையளிக்காமல் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் மூன்று நாள்களாக அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளனர்.

இலங்கையில் மட்டும் இது என்ன நீதி? நியாயம்? புரியேல்லையேப்பா…!

குறித்த சம்பவத்தை பொறுத்தவரையில், பரந்தன் வரைக்குமான ஓட்டோ சேவையை வழங்கியதுடன் சாரதிக்கும் பயணிக்கும் இடையிலான அறிமுக உறவு முடிவுக்கு வருகிறது. உலகத்தின் கடைக்கோடியில் வசிக்கும் நீதி நியாயம் தெரிந்த ஒவ்வொருவரும் இந்த பொதுச்சேவை தொடர்பை நன்றே விளங்கிக்கொள்ளுவார்கள்.

ஆனால் இலங்கை பொலிஸாரின் செயல்பாட்டை பொறுத்தவரையில் குறித்த சம்பவத்தின் மூலம்,
யாராவது பயணிகள் ஓட்டோவில் பயணிக்க கேட்டால், “நீங்க நல்லவரா? ரொம்ப ரொம்ப நல்லவரா? எங்க கிராம சேவையாளரின் நற்சான்று பத்திரத்தை (Corrector Certificate) காட்டுங்க பார்ப்பம்” என்று, கேட்டு வாங்கிப்பரீட்சித்த பின்னரே, ஓட்டோ சேவையை பயணிகளுக்கு வழங்குமாறு சாரதிகளுக்கு பொலிஸார் கூற முற்படுகின்றனரா?

இல்லை, ஓட்டோக்களில் ஏறுவதற்கு முன்னர், சாரதிகளுக்கு “நாங்க சுத்த தங்கம்” என்று காட்டிவிட்டு ஏறுவதற்கு, பயணிகளுக்கு ஏதாவது பிரத்தியேக அட்டைகளை பொலிஸார் வழங்கியுள்ளனரா?

இலங்கை பொலிஸ் சேவையில் நீதி நியாயம் என்ன? பொலிஸார் கடைப்பிடிக்கும் சட்டம் என்ன? எல்லாமே புரியாத புதிராக இருக்கின்றன. நாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றிய பெரும் குழப்பத்தில் மக்கள் மூளையை கசக்கிப்பிசைகின்றனர். பொலிஸாரின் பிரச்சினை என்ன? அவர்களுக்கு என்ன வேண்டும்? தேவைகள் என்ன? எதை எதிர்பார்க்கின்றனர்? என்பதை பொலிஸாரே தம் வாயால் கூற வேண்டும். கூறாதவரைக்கும் தம்மைச்சுற்றி “என்ன நடக்கிறது?” என்ற பெரும் குழப்பத்திலிருந்து மக்கள் விடுபடுவது அவ்வளவு சுலபமல்ல!

பொலிஸாரின் தேவையை இனம் காணாத மகிந்த அரசு!

சம்பவம் நடைபெற்ற மறுநாள் காலை, ஓட்டோ சாரதியான தனது கணவரை பார்க்கச்சென்ற மனைவியை தனியாக அழைத்துப்பேசிய பொலிஸார், “ஐம்பதாயிரம் ரூபா பணம் தந்தால் கணவரை விடுவிக்க முடியும்” என்று கூறியுள்ளனர். அதற்கு அந்தப்பெண், “எங்களிட்ட பணம் இல்ல. நாங்க சரியான கஸ்டத்தில இருக்கிறம்” என்று கூற, அப்படியென்றால் தம்முடன் பாலியல் உறவுக்கு உடன்படுமாறு வற்புறுத்தியுள்ளனர்.
அதற்கு அந்தப்பெண் எதிர்ப்பு தெரிவித்து பேச, யாரோ ஒருவரை கண்ணைக்கட்டி அழைத்து வந்து குறித்த பெண்ணுக்கு முன்னால் நிறுத்திய பொலிஸார்,

அந்த கண்கட்டியிடம், “டேய் சொல்லுடா. கடைசியா இந்த வே… ட்ட எப்படா போய் வந்தனீ. உண்மைய சொல்லுடா” என்று மிரட்டிக்கேட்க, அதற்கு அந்த கண்கட்டியும் “நேத்திரவு சேர்” என்று கூற, மீண்டும் பொலிஸார் “எடியே வே… நீ வே… ஆடி இவனிட்ட காசு வாங்கியிருக்கிறாய். உன்ன விபச்சார கேசுல உள்ள தூக்கி போட்டுறுவம்.” என்று கூறியுள்ளனர்.

அதற்கு குறித்த பெண், “எல்லா பொண்ணுகளையும் மாதிரி என்னையும் நினைச்சிட்டீங்க. உங்கள நான் சும்மா விடமாட்டன். எல்லா மீடியா ஒப்பீஸ்சுக்கும் போவன். எல்லா மனித உரிமை அமைப்புகளுக்கும் போவன். என்ட கணவர எப்பிடி வெளியால எடுக்கணும் எண்டு எனக்குத்தெரியும்.” என்று கோபத்தொனியில் பேச,

“என்ன புலின்னு நெனைப்பா? பழைய மாதிரி வெறைப்பா பேசுறத பார். எடி ஏய் வே… கண் முன்னாடி நிக்காதடி. வே… ஓடடி” என்று தூசன வார்த்தைகளால் பேசியவாறு பொலிஸார், தமது இடுப்புபட்டியை (பெலிட்) உருவி அடித்துத்துரத்தியுள்ளனர்.
தற்சமயம் அந்த முன்னாள் போராளியை நீதிமன்றத்தில் கையளிக்காமல் பயங்கரவாத விசாரணைப்பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், அவரது ஓட்டோவை நீதிமன்றத்திடமோ அன்றி, மனைவியிடமோ பொறுப்பளிக்காமல் தமது பாவனையில் வைத்துள்ளனர்.

குரு எவ்வழியோ, அவ்வழியிலேயே அவரது சீடர்களும் (பாதுகாப்பு பிரிவினர்) செல்லுகின்றனர். எங்கே சென்று முடியும் இந்த பாதை…? யாரோ யாரோ அறிவார்…?

முக்கிய கவனத்துக்கு:

குறித்த அநீதி தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் என்று, தமது மனித உரிமை செயல்பாடுகள் தொடர்பில் நம்பிக்கை கொள்ளும் மனித உரிமை அமைப்புகள், சிவில் சமுக அமைப்புகள், அரசியல் கட்சிகள் எவையாயினும் கோரும் பட்சத்தில், ஆதாரங்களை எம்மால் தரமுடியும். சாட்சியையும் அடையாளப்படுத்த முடியும்.

வடபிராந்திய புலனாய்வு ஊடகவியலாளர்,
-கழுகுகண்-

Tags: , ,

Leave a Reply