பகுத்தறிவுள்ள சுயமரியாதை சமுகத்தை படைப்போம்! – ஆசிரியர் தின வாழ்த்துச்செய்தியில் சிவசக்தி ஆனந்தன் எம்.பி

sivasakthy-ananthanகடந்த காலப்போரினாலும், சமுக ரீதியிலான பின்னடிப்புகளாலும் தாக்கம் அடைந்துள்ள ஆசிரியர்கள் அறிவு நிலையிலும், கற்பித்தல் நிலையிலும், வாய்மை நிலையிலும் சமுகத்துக்கு வலுவூட்டும் உயரிய பணி கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

கொடிய யுத்தத்தால் மாணவ-ஆசிரிய சமுகத்தினர் கடுமையான பாதிப்புகளை சந்தித்தனர். ஆசிரியர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்ற தகவல் அறிய முடியாமல் அவர்களின் குடும்பங்கள் துயரத்திலும் வறுமையிலும் வாடிக்கொண்டிருக்கின்றன. உழைப்புக்கான உரிய வேதனம் வழங்கப்படாமலும், இளைப்பாறும் காலத்தில் ஓய்தியம் இல்லாமலும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் தென்னிலங்கையிலுள்ள சூழல் போல உயர்படிப்புக்கான வசதி வாய்ப்புகள் வடக்கு கிழக்கிலுள்ள ஆசிரியர்களுக்கு இருந்ததில்லை. இதனால் தொழில்பயிற்சிகள் வாண்மைத்துவ விருத்திக்கான பயிற்சிகள் நிர்க்கதி நிலையை அடைந்திருந்தன. வளப்பற்றாக்குறை, பாகுபாடு, அரசியல் பழிவாங்கல் என்று பல்வேறு நெருக்குதல்களினால் ஆசிரியர்கள் உளப்பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். உளப்பாதிப்புகளில் இருந்து கொண்டு வெற்றிகரமான கற்பித்தலில் தொழிற்பட முடியாது. அப்படியிருந்தும் சவாலான பணியை திறம்பட செய்து எமது மாணவ சமுகத்தை வளப்படுத்தி வரும் ஆசிரியர்கள் கௌரவத்துக்குரியவர்கள்.

பல்வேறு தடைகள், இடர்கள் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டு, புதிய கற்பித்தல் தொழில்நுட்பங்களில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் பின்னடைந்தவைகளாக இருக்கின்ற போதும் கூட, தமது புத்தாக்க சிந்தனைகள், புதிய தேடல்கள், புதிய படைப்புகள் ஊடாக தடைகளை வெற்றி கொண்டு எமது தமிழ் மாணவர்களை கல்விப்பரீட்சைகளில் உயர்ந்த பெறுபேறுகளை எட்டச்செய்த ஆசிரியர்களின் பணி பாராட்டுக்குரியது.

கலாவதியாகிய பொருட்கள் சந்தையிலிருந்து அப்புறப்படுத்தப்படுவது போல, அறிவை வளர்த்துக்கொள்ளாமல் விட்டால் ஒவ்வொருவரும் அந்தந்த துறைகளிலிருந்து பொருட்கள் போல அகற்றப்பட்டு காணாமல் போய்விடுவார்கள். அப்படியிருந்தும் பொருளாதார தடைகள், வாழ்க்கைச்சுமைகளுக்கு மத்தியிலும் சுயமுயற்சியால் தம்மை புதுப்பித்து அர்ப்பணிப்புடன் ஆரோக்கியமான மாணவர் சமுகத்தை உருவாக்கிவரும் ஆசிரியர்களை எமது மண்ணில் காண்கின்றோம்.

ஆசிரியர் பணி தொழில்பட்டதல்ல. அது சேவை சார்ந்தது. சமுகத்தை நேசித்து சமுக பொறுப்புணர்ச்சியோடு வாழக்கூடிய நல்ல பிரஜைகளை உருவாக்க கூடிய வளமான சிந்தனை உடைய ஆசிரியர்கள் எமது மண்ணுக்கு வாய்த்திருப்பது பெருமை தருகிறது. இனப்பற்று சமுகப்பற்று மொழிப்பற்றை இளைய சமுகத்தினரிடம் வளர்த்தெடுக்காமல் விட்டிருந்தால், உரிமைக்காக குரல் கொடுக்கக்கூடிய நியாயத்துக்காக செயல் ஆற்றக்கூடிய துடிப்பான சமுகம் இல்லாமல் போய்விட்டிருக்கும். எனவே பகுத்தறிவுள்ள சுயமரியாதை சமுகத்தை எமது மண்ணின் ஆசிரியர்கள் படைத்துள்ளார்கள். இனியும் படைப்பார்கள். படைக்க வேண்டும்.

என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆசிரியர் தின வாழ்த்துச்செய்தியில் கூறியுள்ளார்.

Tags: ,

Leave a Reply