அவுஸ்திரேலியா , அமெரிக்கா , கனடா , நியூசிலாந்து , போன்ற பல தேசிய அரசுகள் தோன்றுவதற்கு முன்னர் யாழ்ப்பாண பேரரசை நிறுவி தனக்கான தனி நாட்டுடன் வாழ்ந்தவர்கள் ஈழத்தமிழர்கள். இன்று தமது தேசத்தை இழந்து உலக அகதிகளின் அடையாளமாக உலக நாடுகள் பலவற்றிலும் அடைக்கலம் புகுந்து வாழும் நிலைக்குள் உள்ளாகி இருக்கின்றனர். காலத்தாலும் கடவுளாலும் கைவிடப்படவர்களோ என்று நினைக்கும் அளவுக்கு வேதனைகளை அனுபவிக்கும் இனமாக ஈழத்தமிழினம் தன் வாழ் நாளை கழித்து வருகிறது.
தொடரும் இனப்படுகொலை தமது மரபுவழி தாயகத்தில் இருந்து தமிழர்களை புலம்பெயர வைத்துக்கொண்டு இருக்கிறது. கிட்ட தட்ட ஒரு வருடத்துக்கு முன்பு ஸ்ரீலங்கா அரசே இன சுத்திகரிப்பின் வெளிப்பாடாக மிகவும் திட்டமிட்ட முறையில் தனது ஆட்களை கொண்டு படகு படகாக தமிழர்களை ஏற்றியும் அனுப்பியது.
வாழ்வதற்காக மரணத்தின் பாதையை தெரிந்தெடுத்து அதில் செத்து பிழைத்து கரை ஒதுங்கிய உறவுகள் படும் இன்னல்கள் சில வார்த்தைகளால் வடிக்க முடியாதவை. நாடு இழந்த தமிழனை அரவணைக்கும் தேசங்களில் அவுஸ்திரேலியாவும் முதன்மை பெறுகிறது.
அவுஸ்திரேலியா! அது அடைக்கலம் புகுந்தவர்களுக்கு வாழ்வளிக்கும் தேசம். அங்கு வாழும் ஆதிக்குடிகளை தவிர எல்லோரும் வந்து குடியேறியவர்களே அப்படித்தான் வரலாறு சொல்லுகிறது. ஆனால் இன்று அடைக்கலம் புகுபவர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார்கள் , அதிலும் குறிப்பாக தமிழர்களின் நிலை பெருந்துயரங்களை கொண்டதாகிறது. இத்துயரங்களுக்கு உள்ளூர் அரசியல் மட்டுமல்ல, அதற்குள் இந்து சமுத்திரத்தின் பாற்பட்ட ஒரு சர்வதேச அரசியல் வலைப்பின்னல் இருப்பதாகவே என்ன தோன்றுகிறது.
கடந்த பொது நலவாய மாநாட்டு அனுபவங்கள், தாய் பிள்ளையான பிரித்தானியா அவுஸ்திரேலியாவின் நிலைப்பாடு, அமெரிக்காவின் செல்லப்பிளைகளில் ஒருவராக இருக்கும் அவுஸ்திரேலியாவின் கோகோஸ் தீவில் அமையப்போகும் அமெரிக்காவின் இராணுவ தளம், சிறிலங்காவின் இன்றைய ஆட்சி. இவை அனைத்தையும் ஆழாமாக சிந்தித்தால் ஒரு புள்ளியில் அந்த சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. இக்கட்டுரையின் நோக்கம் இதனை ஆராய்வதில்லை மாறாக மக்கள் என்ன பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதே.
அடைக்கலம் தேடி வந்தவர்களில் புரட்டாதி மாதம் 2012ம் ஆண்டுக்கு பிறகு வந்தவர்களில் யாருக்கும் இதுவரையில் விசாரணை நடத்தப்பட்டு நிரந்தர விசா வழங்கப்படவில்லை, இதில் பலர் வேலை செய்வதற்க்கான உரிமை அற்ற ஆறுமாத , மற்றும் ஒரு வருட விசாக்களே வழங்கப்பட்டுள்ளது. சிலர் இப்பொழுதும் தடுப்பு முகாமில் தமது வாழ்வை கழித்து வருகின்றனர். ஆறுமாத கால விசா முடிவடைந்த நிலையில் பலர் எந்த விசாவும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இதில் தடுப்பு முகாமில் இருப்பவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருப்பதோடு, அவர்களால் பேசுவதற்கு முடியாத சூழல் ஏற்பட்டு வருவதா அண்மைய மனித உரிமை அமைப்பொன்றின் அறிக்கை தெரிவித்திருக்கிறது
சமுகத்தில் விடப்பட்டிருப்பவர்களுக்கு வழங்கப்படும் செலவுப்பனமானது அவர்களுக்கு போதுமானதாக இல்லை அதனால் பலர் பண பிரச்சனைக்களை எதிர் கொள்ளுகின்றனர்.இதனை வாழ்க்கை செலவை நிரல் படுத்தி நிரூபிக்க வேண்டியதில்லை. அவுஸ்திரேலியாவில் ஒருவர் வேலையற்று இருந்தால் அவருக்கு செலவுப்பணமாக இரண்டு கிழமைகளுக்கு 600 டொலர்கள் வழங்கப்படுகிறது. ஆனால் தஞ்ச கோரிக்கையாளர்களுக்கு இரண்டு கிழமைகளுக்கு 300 இக்கும் 500 இக்கும் இடைப்பட்ட டொலர்களே வழங்கப்படுகிறது இது நபருக்கு நபர் வேறு படுகிறது. உண்மையில் பல்வேறு பட்ட செலவு ஆய்வுகளின் பின்பே அவுஸ்திரேலிய நிரந்தர வாசிப்பாளர்கள் வேலை இழக்கும் பட்சத்தில் அவர்களுக்கு நாளந்த வாழ்க்கை செலவுக்கு 600 டொலர் தேவை என்னும் அடிப்படையில் அது வழங்கப்படும்போது அதே நாட்டில் வசிக்கும் தஞ்ச கோரிக்கையாளர்கள் 200 இக்கும் 300 இக்கும் 400 இக்கும் 500 இக்கும் எப்படி வாழ்க்கை நடாத்த முடியும், குறிப்பாக 300 டொலர் பெறுபவர்கள் எப்படி முடியும் ? இப்போது ஒரு கேள்வி எழும் அப்படியானால் இவ்வளவு காலம் எப்படி வாழ்கிறார்கள் என்று அதற்கு பதில் இதுதான் ”அவர்கள் பசியை உணவாக்கிகொள்ள பழகியவர்கள்”.
அடைக்கலம் தேடி வந்தவர்கள் பெரும்பாலானோர் தமது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கொண்டு நடாத்துபவர்கள் அவர்கள் இங்கு வேலையற்று இருக்கும்போது அவர்களின் குடும்பங்கள் வறுமையிலும் வறுமையை அனுபவிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இறுதிப்போர் வன்னியினதும் கிழக்கின் சில பகுதியினதும் பொருளாதாரத்தை சுழியமாக்கியது, கடன் பட்டு கடல் தாண்டி வந்த பின் , கடன் கொடுத்தவனின் நெருக்குதல் , என்று இப்படி வேதனைகளால் மன உளைச்சலுக்கு உள்ளாக வேண்டி ஏற்படுகிறது. இதனாலேயே தன்னை மாய்த்துக்கொல்லும் தற்கொலைக்கும் இவர்கள் முயல்கிறார்கள், வாழ்வின் மனிதன் மிகவும் கடினமானதாக எண்ணுவது மரணத்தைத்தான் அதற்கே அதிகம் அஞ்சுகிறான், அதையே ஒருவன் விரும்பி ஏற்கிறான் என்றால் அவன் வாழ்க்கை எத்தகு கடினமானதாக இருந்திருக்கிறது – இது தற்கொலையின் மறுபக்கம், இதற்கு தூண்டல்களும் பொறுப்பு கூறப்படவேண்டியவர்களே, அதுமட்டமல்ல வீட்டில் வேலையற்று தங்கி இருக்கும்போது தேவையற்ற முரண்பாடுகள் வீட்டில் வசிப்பவர்களுக்கு இடையில் ஏற்படுகிறது சில தருணங்களில் அது சட்டத்தை மீறி செயற்படவும் வழி வகுக்கிறது.
உண்மையில் நடந்த சம்பவம் ஒன்று ஒரு மொழி பெயர்ப்பாளர் அதனை இப்படி சொல்லுகிறார். வேலை செய்யும் உரிமை இல்லாது வேலை செய்த ஒருவரை அதிகாரிகள் கைது செய்து விட்டனர். விசாரணை , எதற்காக வேலை செய்தீர்கள் என்பதற்கு அவர் கூறியது ” இரவு எனது ஜந்து வயது மகளோடு கதைச்சேன் , என்ன சாப்பிட்டாய் என்று கேக்க மகள் சொன்னால் நேற்று மத்தியானம் சமைச்ச சோறு இருந்தது எல்லாரும் குளைச்சு சாப்பிட்டம் என்று’’ என்னால் என் பிள்ளைகள் பட்டினி கிடப்பதை தாங்க முடியவில்லை அதனால் தான் சென்றேன் என்று சொன்னார் .அவர் வேலைக்கு செல்கிறார் என்பது தொடர்பான தகவலை வழங்கி அவருக்கு எதிரில் சாட்சியம் சொன்னது அவரோடு வீட்டில் தங்கி இருந்த அவரைப்போல வந்த ஒருவர்தான் ” என்றார் அந்த மொழிபெயர்ப்பாளர். இக்கட்டுரையாளன் சட்டத்தை மீறி வேலை செய்வதை ஒரு போதும் சரி என்று ஏற்கவில்லை ஆனால் ஆஸ்திரேலியா போல் இல்லை இலங்கையில், பெற்ற தகப்பனே பிள்ளையை , மணந்துகொண்ட மனைவியை காப்பாற்ற வேண்டியவன் ஸ்ரீலங்கா அரசாங்கம் காப்பாற்றாது, அவர்களுக்கு தமிழினத்தை அழிக்க மட்டும்தான் தெரியும். இந்த பின்னணியை இரக்க மனதோடு புரிந்துகொள்வது தர்மமாக அமையும். இல்லையேல் மக்களும் கடினமான தருணங்களில் கடினமான முடிவுகளையே எடுக்க முற்படுவார்கள். அது யாரின் தவறாக அமையும்?.
அடைக்கலம் புகுந்து வந்தவர்களை ஆஸ்த்திரேலியாவில் ஏற்கனவே வாழும் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் தீண்டத்தகாதவர்களாகவே பார்க்கின்றனர், அவர்களுக்குள்ளும் ஆங்காங்கே சிலர் சிரத்தையோடு தஞ்ச கோரிக்கையாளர்களின் பிரச்சனைக்காக இரவு பகலாக கண் உறக்கம் இன்றி உழைத்தும் வருகின்றனர் அது போற்றப்படவேண்டியது. அடைக்கலம் தேடி வந்த தமிழர்களுக்கு அங்கு ஏற்கனவே இருந்த சில தமிழர்களால் வைக்கப்பட்டிருக்கும் பெயர் ”போட் பார்ட்டி , போட் பியூபில் ”. தமிழர்களே தமிழர்களை ஏற்க தயாரற்று இருக்கும்போது ஆஸ்திரேலியர்களிடம் இதை எப்படி எதிர்பார்ப்பது. இந்த இடைவெளி குறைய வேண்டும், இன்சொல் கூறாவிட்டாலும் அவர்களை இகழாதீர்கள் ஏனெனில் அவர்களில் அரைவாசி பேர் முள்ளிவைய்காலை முழுமையாக அனுபவித்துவிட்டு வந்திருக்கிறார்கள். அந்த பெருங் காயத்துள் சொல் ஈட்டிகளை ஏவாதீர்கள்.
நன்றி,
-பதிவு, இளையவன்னியன்.
















