பதுளை கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் 14 சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.எல்.உதயகுமார தெரிவித்தார்.
பதுளை கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக 7 லயன் குடியிருப்புகள் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதுடன் 400 பேர் வரை காணாமற்போயுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீரியபெத்தையில் ஆற்று பள்ளத்தாக்கை அண்மித்தாக உள்ள 7,8,9,10,11 மற்றும் 12ஆம் இலக்க லயன்குடியிருப்புக்களே மண்ணில் புதையுண்டுள்ளன.
இதேவேளை பால் சேகரிக்கும் நிலையங்கள் இரண்டு வாகனங்கள் திருத்தும் இடம் இரண்டு கடைகள் மருத்துவமாது குடும்பம் தங்கியிருந்த விடுதி சாரதியின் வீடு சிகிச்சை நிலையம் மற்றும் கோவில் ஆகியனவும் மண்ணில் புதையுண்டுள்ளன.
இவற்றில் தங்கியிருந்தவர்களும் மேலே குறிப்பிட்ட 66 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 400 பேர் காணாமல் போயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மண்சரிவு இன்று காலை 7 மணிக்கும் 7.30க்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படும் என்று அனர்த்த முகாமைத்துவப் பணியகம் முன்கூட்டியே எச்சரிக்கை விடப்பட்டமையால் பலர் பாதுகாப்பான இடங்களுக்கு முன்கூட்டியே இடம்பெயர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனால் மண்ணில் புதையுண்டவர்களின் எண்ணிக்கையை சரியாக கூறமுடியாதுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை அந்தக் குடியிருப்புக்களில் வசித்த பாடசாலை மாணவர்கள் பலர் இன்று காலையிலேயே மீரியபெத்த பாடசாலைக்கு சென்றுவிட்டனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பான இடங்களில் தங்கியிருந்த பலர் தங்களுடைய உடமைகளை எடுப்பதற்காக இன்று காலை அங்கு
சென்றிருந்த போதே இந்த அனர்த்தத்தில் சிக்கிகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மண்சரிவில் சிக்குண்டவர்களை தேடும் பணியில் முப்படையினரும் களத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு பேரிடியாக விழுந்த மண்சரிவால் கொஸ்லாந்தை தோட்டம் மட்டுமன்றி முழு இலங்கையும் இன்று சோக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.
மேலும் 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி பாரியளவில் இலங்கையை தாக்கி பல உயிர்களை காவு கொண்ட சுனாமிப் பேரலையின் பின்னர் அதிக உயிர்களை காவு கொண்ட இயற்கை அனர்த்தமாக இந்த மண்சரிவு கருதப்படுகிறது.
















