இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா பாதுகாக்கத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமை அமைப்புக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கூட்டாக இணைந்து இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.
புகலிடம் வழங்கப்படக் கூடிய நியாயமான இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களைக் கூட அவுஸ்திரேலியா பாதுகாக்கத் தவறியுள்ளது என தெரிவித்துள்ளன.
அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை பாதுகாக்கத் தவறியுள்ளமை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகளுக்கு எதிரான கமிட்டியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
77 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த அறிக்கையை பகுதி அளவிலும் முழு அளவிலும் ஏற்றுக்கொண்டு கையொப்பமிட்டுள்ளன. சித்திரவதைகளுக்கு எதிரான கமிட்டியின் கொள்கைகளுக்கு புறம்பான வகையில் அவுஸ்திரேலியா செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2013ம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சித்திரவதைகளுக்கு எதிரான கொள்கைளை அவுஸ்திரேலியா பின்பற்றி வருவதாகவும் சில சந்தர்ப்பங்களில் சில சூழ்நிலைகளில் தவிர்க்க முடியாத வகையில் சில சில விடயங்கள் இடம்பெறுவதாகவும் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பொட் தெரிவித்திருந்தார் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் சித்திரவதைகளுக்கு எதிராக 100 வீத கொள்கை பின்பற்றப்படவில்லை என்பது புலனாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகு மூலம் அவுஸ்திரேலியாவை சென்றடையும் 50 வீதமான இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள முடியும் என்ற போதிலும் அரசாங்கம் அவ்வாறு ஏற்றுக்கொள்வதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
















