யாழ். ஐஸ்கிறீம் தடை விவகாரம்! நடந்தது என்ன? (உண்மை ரிப்போர்ட்)

Strawberry Ice Cream Desktop Backgroundயாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஐஸ்கிறீம் உற்பத்திகளுக்கு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் விதிக்கப்பட்டுள்ள தடையால், யாழ்ப்பாண மாவட்ட ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்கள் 2,500 பேர் நேரடியாகவும், 15,000 பேர் மறைமுகமாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐஸ்கிறீம் உற்பத்தியை தமது ஜீவனோபாயத்தொழிலாக செய்து வந்தவர்களின் குடும்பங்களும், உற்பத்திகளின் விற்பனையில் தங்கி வாழ்ந்தவர்களின் குடும்பங்களும் இந்த தடையால் வாழ்வாதாரத்துக்கு வேறு வழியின்றி நடுத்தெருவுக்கு வந்து விட்டதாக ஐஸ்கிறீம் உற்பத்தி கடைகளின் உரிமையாளர்கள் கண்ணீர் விட்டு அழும் காட்சிகள் நெஞ்சை உருக்குகின்றன.

கடனடிப்படையிலும், பெறுமதியான ஆதனங்களை ஈடுவைத்தும் ஐஸ்கிறீம் உற்பத்தி சாதனங்களையும், விற்பனை வாகனங்களையும் கொள்வனவு செய்து தொழில் நடத்தி வந்தவர்கள் தற்கொலை செய்துகொள்வதை விடவும் தமக்கு வேறு தெரிவுகள் இல்லை என்று அழுது துடிக்கும்போது, குறித்த தடை விவகாரத்துக்கு பின்னாலுள்ள உண்மைகளை வெளிக்கொணராமல் இருக்க முடியாது.

வியாபார போட்டிக்காக சிறு உற்பத்தி முயற்சியாளர்களின் வயிற்றில் அடிக்கும் பண முதலைகளும் அதன் ஏஜெண்டுகளும்!

தென்னிலங்கையைச்சேர்ந்த பிரபல ஐஸ்கிறீம் மற்றும் குளிர்பான உற்பத்திகள் கம்பனியான “எலிபண்ட் கவுஸ்” கம்பனியின் வடமாகாண ஏஜெண்டாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் தினசரி பத்திரிகை நிறுவனம் ஒன்றின் உரிமையாளராகிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பல வருடங்களாக தனியார் ஐஸ்கிறீம் உற்பத்திகள் மக்கள் மனதில் நீக்கமற நாமமும் நம்பிக்கையும் பெற்றிருப்பதால், “எலிபண்ட் கவுஸ்” கம்பனியின் உற்பத்திகளின் விற்பனையை ஏஜெண்ட் எம்.பியால் அதிகரித்து அவரால் எதிர்பார்த்த வருமானமும் ஈட்ட முடியாமல் போய்விடும் என்ற பயமே மேற்படி பிரச்சினைகளுக்கு எல்லாம் பிரதான காரணமாகும்.

எனவே விற்பனையை ஊக்குவித்து அதிக வருமானத்தை ஈட்ட “பக்கா ப்ளான்” பண்ணிய அவர், வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சருடன் வவுனியாவில் வைத்து கடந்த 10.10.2014 அன்று “கொமிசன் டீல்” பேசியுள்ளார். இந்த டீல் விவகாரமே யாழ்ப்பாண மாவட்ட ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளுக்கு தடை போடுவதற்கு முக்கிய தூண்டுகோளாகும்.

கடந்த 2012ம் வருடமே யாழ்.தினக்குரல் பத்திரிகை மற்றும் சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் வெளியிட்ட “இமை” மாதச்சஞ்சிகை எல்லாமே, “யாழ்ப்பாண குடிநீரில் மலநீர் கலப்பதற்கான அபாயமும் வாய்ப்புகளும்” குறித்து எச்சரிக்கை செய்து போதுமான அளவு விழிப்புணர்வு பத்திகளை எழுதித்தீர்த்து விட்டன. அக்காலப்பகுதியிலும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியாக கேதீஸ்வரனே பணியிலிருந்தார். அப்போது அவருக்கு வராத மக்கள் நலன் அக்கறை இப்போது எங்கிருந்து பொத்துக்கொண்டு வந்தது?

வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் கொடுத்த தைரியத்தில், இதுநாள் வரையும் காட்டாத அதிரடி நடவடிக்கையில் கேதீஸ்வரன் துணிந்து இறங்கியுள்ளார். அதாவது காசு கொடுத்து பேசவும், செய்யவும் வைக்கப்பட்டுள்ளார்.

மக்களின் உணர்வுகளும், பிரதிபலிப்புகளும்!

ஈழத்திலும் சரி, புலத்திலும் சரி ஐஸ்கிறீம் என்று உச்சரித்தாலே போதும், உடனே யாழ் மண்ணே எல்லோருக்கும் கண்ணில் நிழலாடும். அந்த அளவுக்கு ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்கள் தமது தரமானதும் சுவையானதுமான உற்பத்திகள் மூலம் மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் நாமத்தையும் கட்டி வளர்த்துள்ளார்கள்.

இலங்கையின் தெய்வேந்திரமுனையிலிருந்து பருத்தித்துறை வரைக்கும் “றியோ ஐஸ்கிறீம், ராஜா ஐஸ்கிறீம், லிங்கம் ஐஸ்கிறீம், பழமுதிர்ச்சோலை ஐஸ்கிறீம்” என்று இந்த பெயர்களை உச்சரிக்காத சிறுசுகள் பெரிசுகள் எவரும் இல்லை. இதை வெறுமனே சர்வ சாதாரண விடையமாக நாம் பார்க்க முடியாது. இந்த நாமத்துக்காக, நம்பிக்கைக்காக, வளர்ச்சிக்காக அவர்கள் பல வருடங்களாக உழைத்திருக்கிறார்கள். இன்னும் இன்னும் நுகர்வோருக்கு தரமானதாகவும், சுவையானதாகவும், சுத்தமானதாகவும் கொடுக்க வேண்டும் என்ற தொழில் ஈடுபாட்டுடன் கூடிய பல வருட உழைப்பு அது.

இந்த பல வருட உழைப்பில் அவர்கள் கற்றுக்கொண்டது என்ன? சுத்தம் சுகாதாரத்தில் தப்பித்தவறி எங்காவது தவறு செய்து விட்டால் போதும், மக்கள் மனங்களிலிருந்து தாம் தூக்கி எறியப்பட்டு விடுவோம் என்பதும், வியாபாரப்போட்டி நிறைந்த உலகில் அதற்குப்பின்னர் தாம் மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்பி மேலெழுந்து வரமுடியாது என்பதும் தானே!

ஆனால் தமிழ் மக்களின் உள்ளுர் உற்பத்திகளுடன் போட்டிப்போட முடியாத தென்னிலங்கை “எலிபண்ட் கவுஸ்” கம்பனி, கூட்டமைப்பின் “ஏஜெண்ட்” எம்.பியையும், “கொமிசன்” அமைச்சரையும் பயன்படுத்தி உள்ளுர் உற்பத்திகள் மீது மக்கள் வைத்திருந்த அதீத நம்பிக்கையை தகர்த்தெறிந்திருக்கிறது. பணம் புகுந்து விளையாடுகின்றது.

“ஏஜெண்ட்” எம்.பியும், “கொமிசன்” அமைச்சரும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியை காசுக்கு பேச வைத்திருக்கிறார்கள்!

யாழில் மலநீர் கலந்த நீரில் ஐஸ்கிறீம் உற்பத்திகள் செய்யப்படுகின்றன என்று பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி கூறியதாக, குறித்த “எலிபண்ட் கவுஸ் ஏஜெண்ட்” எம்.பியின் பத்திரிகை, செய்தி வெளியிட்டுள்ளது. வைத்திய அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டால், “மலநீர்” என்ற ஒரு சொல்லையே தான் பயன்படுத்தவில்லை என்றும், தனது கருத்தை குறித்த பத்திரிகை திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளதாகவும் கூறுகின்றார்.

இனி இவர்கள் என்ன தான் வாய்க்கு வாய், வரிக்கு வரி சத்தியம் செய்து சொன்னாலும், ஐஸ்கிறீம் என்று உச்சரித்ததும் “உமிழ்நீர்” உறியவர்களுக்கு, இனி “மலநீரே” ஞாபகத்துக்கு வந்து எச்சிலையே அவர்கள் காரித்துப்புவார்கள்.
“ஏஜெண்ட்” எம்.பியினதும், “கொமிசன்” அமைச்சரினதும் காட்டில் “அடடா அடடா, இனி பண மழை தான்!”

ஆயினும் உள்ளுர் சிறு தொழில் முயற்சி உற்பத்தியாளர்களின் உற்பத்திகளுக்கு தொடர்ந்தும் ஆதரவும் அங்கீகாரமும் வழங்குவது மக்களின் விருப்பிலேயே தங்கியிருக்கிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து,
-இரும்பொறை-

Tags: , , ,

Leave a Reply