வட மாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராஜாவை பாடசாலை அதிபர் அச்சுறுத்தியுள்ளமை தொடர்பில் தான் வன்மையாக கண்டிப்பதாக வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று (20.11) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் இன்று பல அட்டுழியங்கள் தினம் தினம் நிகழ்ந்தேறி வருகின்ற நிலையில் வட மாகாண சபை உறுப்பினர் இ. இந்திரராஜாவை பாடசாலை அதிபர் தொலைபேசியில் அச்சுறுத்தியுள்ளார்.
பாடசாலை அதிபர் ஒருவர் மாகாணசபை உறுப்பினர் ஒருவரை அச்சுறுத்தும் அளவிற்கு வட மாகாணத்தின் பாதுகாப்பு நிலை காணப்பட்டு வருகின்றது என்பதற்கப்பால் அதிபர்கள் மத்தியிலும் அரசியல் புரையோடிப்போயுள்ளது.
அரச தரப்பினரின் அரசியல் செல்வாக்கு இல்லாது மாகாணசபை உறுப்பினரை அச்சுறுத்துவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த அளவிற்கு ஊழல்களை மறைப்பதற்கு கூட அரசியல் வட மாகாணத்தில் பயன்படுத்துப்படுகின்றது.
அரசு தனக்கு சாதகமானவர்கள் எதனையும் செய்யாம் என்ற நிலையில் விட்டுள்ளமையே இவ்வாறான நிலைக்கு காரணமாகும். வட மாகாணசபை உறுப்பினரை அச்சுறுத்திய அதிபர் நீண்ட காலமாக பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தபோதெல்லாம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாத அளவிற்கு அரசியல் செல்வாக்கை பயன்படுத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் தற்போது வட மாகாணசபை உறுப்பினரை அச்சுறுத்திய பின்னர் இவ் அதிபர் அமைச்சர் ஒருவரின் பின்னால் நின்று தன்னை பாதுகாக்க முயற்சித்து வருகின்றார்.
எனவே இவ்வாறான அரசியல்வாதிகளாலேயே இன்று வட மாகாணத்தில் இவ்வாறான தான்தோன்றித்தனமாக செயற்பாடுகள் மேலோங்க காரணமாகியுள்ளது.
எனவே, வட மாகாணசபை உறுப்பினரை அச்சுறுத்திய அதிபரை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
















