ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேனவை கட்சியின் சகல பொறுப்புக்களிலிருந்தும் நீக்குவதற்கு
ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். மைத்திரிபால சிறிசேனவையும் பணி நீக்கவும், எஸ்.பி திஸாநாயக்கவிற்கு பொறுப்புக்களை ஒப்படைக்கவும் அவசரமாக ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவினை கூட்டியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன, அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, பிரதி அமைச்சர் எம்.கே.டி.எஸ். குணவர்தன, தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க உள்ளிட்டவர்கள் இவ்வாறு பணி இடைநிறுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மைத்திரிபால சிறிசேன எந்தவொரு பதவியையும் ராஜினாமா செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் சுகாதார அமைச்சர் பதவிகளை இதுவரையில் உத்தியோகபூர்வமாக மைத்திரிபால சிறிசேன ராஜினாமா செய்யவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக இருந்த எஸ் பி திஸ்ஸநாயக்கா பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சிறை சென்றிருந்தார். பின்னர் ஐக்கியதேசியக் கட்சிக்கு தாவி மகிந்தவின் காலத்தில் மீண்டும் அரசாங்க பக்கம் சென்றவர். தேர்தல்களில் குளறுபடி செய்வதில் கைதேர்ந்த இவர் காடைத்தனம் புரிவதில் பெயர்பெற்றவர் என்றும் சந்திரிக்காவுக்கு பரம விரோதி எனவும் தெரிவிக்கப்படுகிறது.
















