அன்பான உறவுகளே எம் மக்களின் விடுதலைக்காக எம்முடன் புறப்பட்டு தமது இன்னுயிரை ஈந்த மாவீரர் குடும்பங்களும், மாவீரர் ஆகாது உயிரைக் கையில் பிடித்து வாழும் எங்களுக்காகவும் சற்று சிந்தியுங்கள்…
எங்கள் மாவீரருக்காக நீங்கள் ஏற்றும் தீபங்கள் அவர்களை மகிழ்விக்க வேண்டுமானால் அவர்களின் குடும்பங்களின் வாழ்வில் முதலில் ஒளியேற்ற வேண்டும்…
சமூக வலைத்தலங்களில் எங்கள் உருவப்படங்கள் மிளிர்கின்றன… ஐரோப்பிய மண்டபங்களில் கண்ணை மின்னும் ஒளி தீபங்கள் மிளிர்கின்றன… ஆனால் எமது வீட்டின் அடுப்புகளில் விறகில்லை… எங்கள் குழந்தைகள் கற்பதற்கு விளக்கில்லை….
எம் அன்புக்குரியவர்களே புலம்பெயர் நாடுகளில் மாவீரர் வாரங்களில் மண்டபங்களிலும் – மிகையான கொண்டாட்டங்களிலும் கொட்டப்படும் பணம் இங்கு வாழும் ஆயிரம் ஆயிரம் மாவீரர் குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றட்டும்.. ஆலயங்களிலும், தேவாலயங்களிலும் உங்கள் வீடுகளிலும் மாவீரர்களை நினைவுறுத்தி லட்சக்கணக்காண உங்கள் நாட்டுப் பணத்தை இங்குள்ள நம்மவர் குடும்பங்களுக்கு அனுப்பினால் எங்கள் மாவீரர்களின் கனவுகள் நிட்சயம் நனவாகும்.
அவர்களின் கனவுகள் நனவாக இவற்றை நிறைவேற்றுவீர்களா??????
புலிகள் எமது மண்ணில் உயிர்ப்புடன் இருந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் குடும்பங்களின் நலன்காப்பிற்கான பொறிமுறையை ஏற்படுத்தி அவர்களிற்கான வாழ்வாதார உதவியினை செய்தல்.
அவயவங்களை இழந்து எந்த ஆதாரமுமின்றி வாழ வழியின்றி தேற்றுவாரின்றி நிற்கதியாய் நிற்கும் எமது போராளிகளை பராமரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தல்.
புனர்வாழ்வு என்ற போர்வையில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டும் இன்னமும் இராணுவப் புலனாய்வாளரின் தொடர்ச்சியான தொல்லைகளாலும் சமூகத்தின் புறந்தள்ளலாலும் மனம் முறிந்து செய்வதறியாத நிலையில் நடுத்தெருவில் விடப்பட்ட போராளிகளிற்கு உதவித்தொகை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்திற்காக சுயதொழில் உதவிகளையும் வேலை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தல் .
சிறைகளில் வாடும் அரசியற்கைதிகளும் அவர்களின் குடும்பங்களும் எந்தவித உதவிகளும் இன்றித் தனித்து விடப்பட்டு துவண்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களின் குடும்பங்களிற்கு பண உதவிகள் வழங்கி, அவர்களின் வழக்கிற்குகளிற்கான செலவுகளையும்பொறுப்பெடுத்தல்.
எமது மக்கள் எமது மண்ணில் நாள்தோறும் முகம் கொடுக்கும் பிரச்சனைகளை சட்டரீதியில் அணுக கூடியவாறான சட்டவல்லுனர்கள் குழாமை நிறுவி அதன் தொடர்ச்சியான விரைவான செயற்பாட்டிற்கான நிதியை ஏற்படுத்திக் கொடுத்தல்.
கிராமியக் கட்டமைப்புக்களிற்கு புத்துயிர் அளித்து அதன் மூலமாக சமூக செயற்பாடுகளை முன்னெடுத்தல்.
போரில் ஏற்பட்ட இழப்பிற்களாலும், தோல்வியாலும் வயது வேறுபாடின்றி உளவியல் தாக்கங்களிற்கு உள்ளாகித் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் எமது மக்களிற்காக இலவச உளவள ஆற்றுப்படுத்தல் சேவைகளை வழங்குவதற்கான பொறிமுறையை ஏற்படுத்தல்.
எமது மக்கள் எமது மண்ணில் வாழ வழி செய்யக்கூடிய அத்தனை சாத்தியமான கட்டமைப்புக்களையும் ஏற்படுத்தல். இவற்றை செய்வீர்களா?????
















