ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்துடனும் மைத்திரிபால ஜனாதிபதியின் கீழ் அதிகாரம் பகிரப்பட்ட ஜனநாயக ஆட்சியுடனுமேயே அடுத்த வருடம் ஆரம்பமாகும். சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் இதுவேயாகும். இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது எனத்தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஆட்சியமைக்கப்போவது ஐக்கிய தேசியக் கட்சியோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ அல்ல. அனைவரையும் ஒன்றிணைத்த ஐக்கிய கூட்டமைப்பே ஆகும் எனவும் குறிப்பிட்டார்.
எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று ஐ.தே.க.வின் தலைமையகமான சிறிகொத்தாவில் வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்த நிகழ்வில் உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்;
இன்று கூடியிருப்பது வழமையைவிடவும் வேறுபட்ட புதிய கூட்டணியாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினை வீழ்த்த இந்த இராணுவ ஆட்சியினை தகர்க்க மக்களையும் நாட்டையும் காப்பாற்ற உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணியே அடுத்த ஆண்டு ஆரம்பமாகும்போது ஆட்சியிலிருக்கும்.
ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியின் கீழ் அதிகாரம் பகிரப்பட்ட ஜனநாயக ஆட்சியுமே நாட்டில் இருக்கும்.
வழமையாக இந்த நாட்டில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமே போட்டியிருக்கும். ஆனால், இன்று நிலைமை அவ்வாறு அல்ல. தற்போது ராஜபக்ஷ என்ற குடும்பத்திற்கும் ஜனநாயகத்தை ஏற்படுத்தும் கூட்டணிக்கும் இடையிலேயே போட்டி நிலவுகின்றது.
எனவே, இதில் ஜனநாயகம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே ஆளும் தரப்பில் இருந்து நாட்டை நேசிக்கும் உறுப்பினர்கள் எம்மை நாடுகின்றனர்.மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்.
அவரே இன்று மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியை வெறுத்து விட்டார். ராஜித சேனாரத்ன எம்முடன் இருக்கிறார். இளம் உறுப்பினர்கள் இருக்கின்றனர். இன்றும் நாளுக்கு நாள் அரசில் இருந்து உறுப்பினர்கள் வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். இதற்கு காரணம் மஹிந்த ராஜபக் ஷ குடும்பத்தின் அராஜக ஆட்சியேயாகும்.
யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளில் நாட்டில் ஜனநாயகம் அழிக்கப்பட்டு விட்டது. பொருளாதாரம் சீரழிந்து விட்டது. உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தினால் புலிகளின் தடை நீக்கப்பட்டவுடன் அதற்கு எதிராக நாம் குரல் கொடுத்தோம். ஆனால், அரசு வாய்களை மூடிக்கொண்டது.
புலிகளை ஆதரிப்பது யார்? மேற்கு உலகின் விடுதலைப்புலி உறுப்பினர்களை ஆதரிப்பது யார் என்பதை இப்போது மக்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். எனவே, இப்போது எமது எதிர்பார்ப்பு நாட்டின் உரிமைகளையும் சுதந்திரத்தினையும் வென்றெடுப்பது மட்டுமேயாகும். அதற்காக நாம் அனைவரும் கட்சி பேதமின்றி ஒன்றிணைய வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி, கூட்டமைப்பு அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இன்று கூடியிருப்பது ஸ்ரீலங்கா சுதந்திரம் கட்சியோ, ஐக்கிய தேசிய கட்சியோ அல்ல.
இது சகலரையும் ஒன்றிணைத்த ஜனநாயக கூட்டணி. இந்த கூட்டணி ஆட்சியினை அமைத்து மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதியாக தெரிவுசெய்ய வேண்டும். அவர் 100 நாட்களில் நாட்டின் ஜனாதிபதி முறைமையினை நீக்கி அதிகார பகிர்வினை மேற்கொள்வார்.
அதன்பின் சகல விதத்திலும் பொறுப்பு சொல்லக்கூடிய பாராளுமன்ற முறைமையின் கீழ் நாம் செயற்பட காத்திருக்கின்றோம். எனவே 100 நாட்களே இக்கூட்டணி அதன் பின்னர் மக்கள் தமக்கான அரசை உருவாக்கி கொண்டு கட்சிகளின் சுயாதீனத்தன்மையில் தனித்து செயற்பட முடியும். எனவே மக்கள் இப்போது சரியான முடிவினை எடுக்க வேண்டும். இந்த சந்தர்ப்பம் மிகவும் பெறுமதியானது. நாட்டின் போக்கினை மாற்றியமைக்க இதுவே சரியான தருணம். இதை எவரும் தவறவிட வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்.
















