இறந்த யாசகரின் வங்கிக் கணக்கில் இருந்த பணம் எவ்வளவு தெரியுமா ?

இந்தியாவில், ரயில் விபத்தில் உயிரிழந்த யாசகர் ஒருவரின் வங்கிக் கணக்கில் 8.77 இலட்சம் இந்திய ரூபா வைப்பிலிருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவின் மும்பை மன்கார்ட் ரயில் நிலையத்திற்கு அருகில் யாசகம் எடுத்து வாழ்க்கையை நடத்திவந்தவர் பிராடிசந்த் ஆசாத் (82). சமீபத்தில், மன்கார்ட் – கோவண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே, தண்டவாளத்தில் பிராடிசந்த் ஆசாத் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து ரயில் விபத்தில் குறித்த யாசகர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்தப் பகுதி மக்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். அப்போது, கோவண்டி பகுதியில் சிறிய குடிசையில் அவர் வசித்து வந்ததாக தெரியவந்தது. அந்த குடிசைக்கு சென்ற பொலிஸார், மேலும் சோதனைகளை முன்னெடுத்தனர்.

அப்போது, சிறிய இரும்பு பெட்டிகளில் ஏராளமான நாணயங்கள் இருந்தன. அவற்றை எண்ணியபோது இந்திய ரூபா மதிப்பில் 1.75 லட்சம் ரூபாய் இருந்தது. இவற்றை எண்ணி முடிக்கவே, பொலிஸாருக்கு இரண்டு நாட்களாகின.

மேலும், மற்றொரு பெட்டியை உடைத்து சோதனையிட்டபோது, அதில் ஆசாத்தின் ஆதார் கார்ட், பான் கார்ட் உள்ளிட்டவை இருந்தன. அத்துடன், மும்பையில் உள்ள இரண்டு வங்கிகளில், மொத்தம் 8.77 லட்சம் ரூபாய் வைப்புத் தொகையாக அவர் செலுத்தியிருப்பதற்கான பற்றுசீட்டும், வங்கியின் கணக்கு புத்தகமும் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆசாத்தின் சொந்த மாநிலம், ராஜஸ்தான் என்பதும், அங்கு அவருக்கு, ஒரு மகன் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஆசாத்தின் மகன் இருப்பிடத்தை கண்டுபிடிக்க,பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!