இலங்கைக்கு சர்வதேச அரங்கில் கடும் சவால்மிக்க இராஜதந்திரச் சமர்க்களமாக விளங்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரின் இரண்டாம் நாள் அமர்விலும் இலங்கை மீது கண்டனக்கணைகள் தொடுக்கப்பட்டன.
பேரவையின் முதல்நாள் அமர்வில் உலக நாடுகள் பல, மனித உரிமை விவகாரம் சம்பந்தமாக இலங்கையைக் கடுமையாகச் சாடியிருந்த நிலையில், இரண்டாம் நாள் அமர்வில் மனித உரிமை அமைப்புகள் பல இணைந்து இலங்கை மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.
இலங்கையின் மனித உரிமை விவகாரங்களைக் கையாள்வதற்கு அனைத்துலக பொறி முறை அவசியம் என்றும் அவை வலியுறுத்தின.
மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகளுக்கான சட்டத்தரணிகள் அமைப்பு உள்ளிட்ட மனித உரிமைகள் அமைப்புகளே இலங்கைக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற அமர்வில் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 24 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானது. தொடக்க உரையாற்றிய மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, ஒரு நிமிடம் இலங்கை குறித்தும் உரையாற்றியிருந்தார். இலங்கைப் பயணத்தின் போது தன்னைச் சந்தித்தவர்கள் அச்சுறுத்தப்படுவதை அவர் வன்மையாகக் கண்டித்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரண்டாம் நாள் அமர்வின் போது மனித உரிமைகள் அமைப்புகள் கருத்துகளை வெளியிட்டன. இதில் குறிப்பாக அனைத்து அமைப்புகளும் இலங்கையின் மனித உரிமை நிலைவரங்களைக் கடுமையாகச்சாடின.
இலங்கையில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையைச் சந்தித்தவர்கள் இலங்கைப் படையினரால் அச்சுறுத்தப்பட்ட விவகாரம் உட்பட மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீதான இலங்கை அரசின் அடக்குமுறைகள், முஸ்லிம்கள் மீதான அச்சுறுத்தல்கள், அனைத்துலக விசாரணைக்கான அவசியம் என இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளன.
இதேவேளை, உலகத் தமிழர் பேரவைத் தலைவர் இம்மானுவேல் அடிகளாரும், கனடாவின் சட்டத்தரணிகள் கண்காணிப்பு அமைப்பைச் சேர்ந்த கரி ஆனந்தசங்கரியும் இலங்கைத் தீவில் தமிழர்கள் சந்தித்துவருகின்ற மனித உரிமை நெருக்கடிகள் குறித்து சுட்டிக்காட்டி உரையாற்றியிருந்தனர்.
இலங்கை தொடர்பில் அனைத்துலக விசாரணையின் அவசியத்தை வலியுறுத்திய சர்வதேச மன்னிப்புச்சபை, இலங்கைப் பொலிஸாரால் நடந்தேறும் வன்கொடுமைகள் குறித்து பிரஸ்தாபித்திருந்தது. இதேவேளை, நீதி தோற்றுப்போன நாடாக இலங்கையை சர்வதேச மன்னிப்புச் சபை விமர்சித்தது.
இலங்கையின் மனித உரிமைகள் நிலவரத்தைக் கையாள்வதற்கு அனைத்துலக பொறிமுறை அவசியம் குறித்து கருத்துரைத்த மனித உரிமைகள் கண்காணிப்பகம், மனித உரிமைகளுக்கான சுதந்திரமான வெளியற்ற நாடாக இலங்கை உள்ளதென்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையைச் சந்தித்தவர்களை இலங்கைப் படையினர் அச்சுறுத்திய விடயத்தை மனித உரிமைகளுக்கான சர்வதேச சேவைகள் அமைப்பு வன்மையாகக் கண்டித்திருந்தது.
















