இறுதி யுத்தத்தில் உறவினர்களினால் கையளிக்கபட்டு, சரணடைந்து, காணாமல் போயுள்ளவர்கள் கொலையுண்டு இருந்தால் அரசாங்கம் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவர் இதனை தெரிவித்தார்
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இறுதி யுத்தத்தில் தம்மிடம் கையளிக்கப்பட்டோ சரணடைந்தோ காணாமல் போனவர்கள் என்று எவரும் இல்லை என தற்போது அரசாங்கம் கூறுகின்றது.
வவுனியா மேல் நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி எழிலன் உட்பட இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட முன்னாள் புலிகளை நீதிமன்றில் முற்படுத்துமாறு கோரும் ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணையின் போதே நேற்றைய தினம் இவ்வாறு கூறியுள்ளார்கள்.
இறுதி யுத்தத்தின் போது தமது பிள்ளைகள் கணவன்மாரை தாம் இராணுவத்தினரிடம் கையளித்தோம் என அவர்களின் உறவுகள் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக கூட சாட்சியங்கள் அளித்துள்ளனர்.
எனவே அவ்வாறு கையளிக்கப்பட்டோ சரணடைந்தோ இன்று காணாமல் போயுள்ளவர்கள் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு இருக்க வேண்டும் இல்லை எனில் அவர்கள் அனைவரும் கொல்லபட்டு இருக்க வேண்டும்.
அவ்வாறு அவர்கள் கொல்லப்பட்டு இருந்தால் அது போர் குற்றமாகும். சரணடைந்த ஒருவரை கொலை செய்வது பாரிய குற்றமாகும். அதனால் அரசாங்கம் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்
அதேவேளை யாழ். மாநகர சபை ஊழியர்கள் வெற்றிலை சின்னத்திற்கு வாக்களிக்க கோரி வீடு வீடாக சென்று பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்
அத்துடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் உள்ள தொண்டர் ஆசிரியர்கள் பட்டதாரி பயிலுனர்கள் என அனைவரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தபடுகின்றனர்.
எனவே உடனடியாக தேர்தல் ஆணையாளர் இவ்வாறு அரச ஊழியர்கள் உத்தியோகஸ்தர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என சுற்று நிரூபம் அனுப்பமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
அதேபோல் 40க்கும் மேற்பட்ட சிங்கள சமூர்த்தி உத்தியோகஸ்தர்கள் இங்குள்ள சமூர்த்தி உத்தியோகஸ்தர்களுக்கு பயிற்சி அளிக்க என அரசாங்கத்தால் அனுப்பபட்டுள்ளனர்.
அவ்வாறு அனுப்பபட்ட உத்தியோகஸ்தர்கள் இங்குள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்க வரவில்லை இங்குள்ளவர்கள் அரசாங்கம் சொன்ன படி வேலை செய்கின்றனரா என்று கண்காணிக்கவே வந்திருக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
















