மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 11 சமுர்த்தி முகாமையாளர்களும், வவுனியா மாவட்டத்தில் புதிதாக நியமனம் பெற்றுள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடபட்டுள்ளதாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தேர்தல் கண்காணிப்பகத்திற்கு முறைப்பாடு செய்துள்ளார்.
இவ் முறைப்பாட்டு கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஒருவர், வன்னி மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலில் அரசாங்கக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்தியுள்ளதுடன் அவர்களை அவர்கள் கடமை புரியும் கிராமங்களைச் சேர்ந்த மக்களும் ஆளும்கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கக்கூடிய வகையில் பிரச்சாரம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார்.
இன்று சமுர்த்தி உத்தியோகத்தர் திருமதி துர்க்கா ஜயராமன் என்பவரின் தலைமையில் வவுனியா மகாறம்பைக்குளம் கிராம சேவகர் காரியாலயத்திற்கு வரவழைக்கப்பட்டு, ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதனால் பொது மக்களுக்கு சமுர்த்தி உத்தியோகத்தர்களினூடாகப் பல வித உதவிகள் வழங்கப்படும் எனக் கூறி ஆளும் கட்சிக்கு வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுறுத்தியதுடன் ஆளும் கட்சி வேட்பாளர் சிலரையுத் அங்கு பிரச்சாரம் செய்வதற்கு அனுமதித்துள்ளார்.
இதே போன்று வவுனியா மாவட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 11 சமுர்த்தி முகாமையாளர்களும், வவுனியா மாவட்டத்தில் புதிதாக நியமனம் பெற்றுள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்களும் பொதுமக்கள் மத்தியில் ஆளுங் கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
நாளைய தினம் உயர்மட்ட அமைச்சர் ஒருவர் வவுனியாவில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்களுடனும் ஏனைய உயர் அத்காரிகளுடனும் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் அக்கலந்துரையாடலில் அபிவிருத்திகள் மற்றும் உதவிகள் என்பன பொது மக்களுக்கு வழங்கப்படுவதற்கு அவர்கள் ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது அவசியம் என்பதனை வலியுறுத்துமாறும் பணிப்புரை வழங்கவுள்ளார் என அறிகின்றேன்.
இவ்வாறு பிரச்சாரங்கள் செய்பவர்களுக்கெதிராக தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கமைய நடவடிக்கை எடுத்து இவ்வாறான பிரச்சாரங்கள் மேலும் தொடராது இருப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
















